
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் மாநில பாஜக இளைஞரணி துணைத் தலைவர் எஸ்.ஜி.சூர்யா அளித்த மனு:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தை தாங்கள் நன்கு அறிவீர்கள். துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான காரணிகள் குறித்து ஆராய மத்திய புலனாய்வுத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புலனாய்வு அமைப்பானது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதுடன் விசாரணையையும் தொடங்கியுள்ளது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மரணங்கள் அரசியல் ரீதியானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஓட்டப்பிடாரத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின் பேரிலேயே துப்பாக்கிச் சூடு நடந்ததாகப் பேசியுள்ளார். இது முற்றிலும் தவறானது. அவதூறானது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
மேலும், திமுக தலைவரின் பேச்சுகள், தேர்தல் நடத்தை நெறிமுறைகளை முற்றிலும் மீறும் வகையில் அமைந்திருக்கின்றன. வன்முறையைத் தூண்டவும், அரசியல் ரீதியாக லாபம் பெறவும் அடிப்படை ஆதாரமற்ற, தவறான செய்திகளை ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். எனவே, இடைத் தேர்தலில் பிரசாரம் செய்வதில் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...