
புதுக்கோட்டையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் திருட்டு போனது 13.75 கிலோ எடையுள்ள தங்க நகைகள் என்பதும், அவற்றின் மதிப்பு ரூ. 4.80 கோடி என்பதும் வங்கி சனிக்கிழமை அளித்த புகாரில் தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் உதவியாளராகப் பணியாற்றியவர் திருக்கட்டளையைச் சேர்ந்த மாரிமுத்து (41). கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிலிருந்து காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டவர் வீடு திரும்பவில்லை. அடுத்த நாள் அவரது கார் திருவரங்குளம் காட்டுப் பகுதியில் தீப்பற்றி எரிந்த நிலையில் நின்றது. வங்கியிலிருந்த நகைகளை அவர் எடுத்துச் சென்றிருக்கலாம் எனக் கருதப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை காலை மணமேல்குடி அருகே கோடியக்கரையில் கடற்கரையில் அவரது சடலம் கரை ஒதுங்கியிருந்தது.
இந்நிலையில் நகைகள் காணாமல் போனதாக அறியப்பட்ட வங்கி வேளை நாட்களில் 5 நாள்களைக் கடந்தும் வங்கித் தரப்பில் புகார் அளிக்கப்படவில்லை. வங்கியில் நகைகளை அடகு வைத்துள்ளோரின் பட்டியல், நகைப் பொட்டலம் ஆகியவற்றை வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட அதிகாரிகள், நகை மதிப்பீட்டாளர்கள் ஆகியோரைக் கொண்டு நகைகளை சரிபார்த்துக் கணக்கிடும் பணி நடைபெறுவதால் தாமதம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், வங்கி அலுவலர்கள் சனிக்கிழமை பகல் புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வந்தனர். அந்தப் புகார் ஆங்கிலத்தில் இருந்ததாகவும், குறிப்பிட்ட நாள்களில் பணியில் இருந்த அலுவலர்கள் மற்றும் முக்கிய சாவிகள் யாரிடம் இருக்கும் என்பன போன்ற தகவல்கள் எதுவும் அந்தப் புகாரில் இல்லை எனவும் கூறி, அவற்றையெல்லாம் இணைத்து எழுதி மீண்டும் எடுத்து வருமாறு காவல்துறையினர் தெரிவித்துவிட்டனர். இதைத் தொடர்ந்து கூடுதல் தகவல்களுடன் சனிக்கிழமை இரவு மீண்டும் புகார் மனு தயார் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டது.
வங்கியின் முதுநிலை மேலாளர் மாரிஸ் கண்ணன் அளித்த புகாரை காவல் ஆய்வாளர் பர. வாசுதேவன் பெற்றுக் கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார். அந்தப் புகாரில் வங்கிக் கிளையில் மொத்தமுள்ள 600 பொட்டலங்களில் (அடகு வைக்கப்படும் நகைப் பொட்டலம்) 459 பொட்டலங்கள் நகைகளுடன் அப்படியே உள்ளன. 141 பொட்டலங்களைக் காணவில்லை. அவற்றில் 13.75 கிலோ நகைகள் இருந்தன. அவற்றின் மதிப்பு மொத்தம் ரூ. 4.80 கோடி ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...