அதிமுக எம்எல்ஏக்கள் மூவருக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேருக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் மூவருக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேருக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் 2 பேர் தொடர்ந்த வழக்கில் விளக்கம் அளிக்குமாறு சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால் விளக்கம் கேட்டு தங்களுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ் தொடர்பாக மேல்நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்கக் கோரி எம்எல்ஏக்களான ஏ.ரத்தினசபாபதி, வி.டி.கலைச்செல்வன் ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுக்கள் மீது இன்று விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவுகளை பிறப்பத்தது.

அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு ஆகியோர் டிடிவி தினகரனுடன் தொடர்பில் உள்ளதாகவும்,  அவர் சார்ந்த நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்று வருவதாகவும் கடந்த ஆண்டு அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் தெரிவித்திருந்தார். சில புகைப்பட ஆதாரங்களுடன் அந்த மூன்று பேர் மீது மீண்டும் கடந்த மாதம் 26-ஆம் தேதி புகார் மனு அளித்திருந்தார். அதை ஏற்றுக்கொண்ட பேரவைத் தலைவர் பி.தனபால் மூன்று எம்எல்ஏக்களிடமும் விளக்கம் கேட்டு கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.30) நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில், பேரவைத் தலைவரின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் ஆகியோர் சார்பில் அவர்களது வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ரிட் மனுக்கள் தாக்கல் செய்தார்.

அந்த மனுக்களில், பேரவைத் தலைவருக்கு எதிராக திமுக  நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்து பேரவைச் செயலரிடம் ஏப்ரல் 30-ஆம் தேதி கடிதம் அளித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தலைவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாரபட்சமாக நடந்து வருகிறார். 

குறிப்பாக, 22 பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் வரும் 23-ஆம் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பேரவைத் தலைவரின் இந்த நடவடிக்கை பாரபட்சமாக இருப்பதை காட்டுகிறது. 

பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருக்கும்போதே, எங்களுக்கு எதிராகத் தகுதி நீக்கம் தொடர்பான உத்தரவை பிறப்பிக்க வாய்ப்புள்ளது.

எனவே, தகுதிநீக்கம் தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் தொடர்பாக பேரவைத் தலைவர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ரிட் மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிடப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள், இது தொடர்புடைய ரிட் மனுக்களை இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com