அதிர்ஷ்டம் இருந்தால்.. ஆரம்பமே சரியில்லையே! சென்னையில் மழை பெய்யும்!!

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மழை மேகங்கள் தயாராகி வருகின்றன. அதிர்ஷ்டம் இருந்தால் சென்னைக்கும் இன்று மழை கிடைக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
அதிர்ஷ்டம் இருந்தால்.. ஆரம்பமே சரியில்லையே! சென்னையில் மழை பெய்யும்!!


சென்னை: காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மழை மேகங்கள் தயாராகி வருகின்றன. அதிர்ஷ்டம் இருந்தால் சென்னைக்கும் இன்று மழை கிடைக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை அறிவித்த போது சென்னைவாசிகள் எல்லாம் சற்று கடுப்பானார்கள்தான். ஆனால் தற்போது வானிலை ஆய்வு மையம் சொன்ன அந்த மேகக் கூட்டங்கள் சென்னையை மூடியுள்ளன. ஆனால் மழை?

சரி சொந்தக் கதை வேண்டாம்.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்னதை சொல்லுங்கள் என்று உங்களது மைன்ட் வாய்ஸ் எங்களுக்குக் கேட்டுவிட்டது.

இதோ.. 

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மேகக் கூட்டங்கள் திரண்டு உள்ளன. இதன் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு உண்டு. இந்த வெப்பச் சலனம் சென்னைக்கு மிக அருகே உருவாகிறது. ஒரு வேளை அதிர்ஷ்டம் இருந்தால் சென்னைக்கு மழை வாய்ப்பு உண்டு. சென்னையின் ஒரு சில பகுதிகளிலாவது நிச்சயம் மழை பெய்யும் அதுவும் அதிர்ஷ்டம் இருந்தால்.

மழை: காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னைவாசிகள் கவனிக்க 

தரைப் பகுதியில் நிலவும் கடுமையான வெப்பமும், கடற்கரையில் இருந்து வரும் ஈரப்பதம் கலந்த காற்றும் இணைந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை பகுதிகளில் இன்று மழைக்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஃபானி புயல் காரணமாக மேற்கு திசையில் இருந்து வரும் வறண்ட காற்றும், கிழக்கு திசையில் இருந்து வரும் ஈரப்பதம் கொண்ட காற்றும் இணைந்து அந்த அற்புதம் நிகழ்ந்துள்ளது. அதுதான் மழை மேகக் கூட்டங்களாக உருவாகியிருப்பது. அதைத்தான் இன்று நாம் பார்க்கிறோம். இன்று பார்க்கலாம் சென்னையின் அதிர்ஷ்டத்தை. சரியாக சென்னைக்கு அருகே இந்த வெப்பச்சலனம் உருவாகிறது. எனவே, வட சென்னை மற்றும் மேற்கு சென்னைப் பகுதிகளை கவனத்துடன் உற்று நோக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இதர பகுதிகளில் இன்றும் நாளையும் 
தமிழகத்தின் பெரும்பாலான உள் மாவட்டங்களில் மழை பெய்யும். கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேற்கண்ட மாவட்டங்களுக்கு அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் மழை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அவை அனைத்தையும் இங்கே பட்டியலிட முடியாது.

வெப்பச் சலனத்துக்கு சிறந்த மாதமாக மாறிய மே மாதம்
மே மாதத்தைப் பார்த்தால் அது மெல்ல மெல்ல வெப்பச் சலனத்தால் மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ள மாதமாக மாறயுள்ளது. இன்று முதல் இரண்டு நாட்களுக்குப் பிறகும் கூட.

மழை பெய்தாலும் அனல் காற்று வீசும்
காஞ்சிபுரம், திருவள்ளூர் சென்னை மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் கடுமையாக இருக்கும். ஒருவேளை மழை பெய்யும் இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் குறையும். மழை பெய்தாலும் கூட வெப்பம் குறையாது.

நிச்சயம் இந்த மழை குடிநீர் பிரச்னையைத் தீர்க்காவிட்டாலும் கூட, சூட்டைக் கிளப்பி விடாத மழையாக இருக்கும் என்று நம்பலாம் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com