நீட் தேர்வர்களுக்கான கட்டுப்பாடுகள் : வைகோ கண்டனம்

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் கண்டனத்துக்குரியவை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.


நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் கண்டனத்துக்குரியவை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.
சென்னை விமானநிலையத்தில் இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
மக்களவைத் தேர்தலிலும், 18 சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது தேர்தல் பிரசாரத்தின் போதே தெரிந்துவிட்டது. நடைபெறவுள்ள  4 சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெறுவது உறுதி. தமிழகத்தில் இயங்கி வரும் ரயில்வே, அஞ்சல் துறை போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் முழுக்க வட மாநிலத்தினரே பணியமர்த்தப்படுகின்றனர். 
தமிழ் பேசத் தெரியாத இந்த மாணவர்கள், தமிழில் தேர்வெழுத வைத்து அதிக மதிப்பெண்ணும் அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படும் மோசடி நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வைப் பொருத்தவரை, தேர்வு எழுத வரும் மாணவிகளின் துப்பட்டாவைப் பறிப்பது, நகைகளை எடுப்பது, மாணவர்களின் முழுக் கைச் சட்டையை வெட்டுவது போன்ற நடவடிக்கைகளில் தேர்வறை அதிகாரிகள் ஈடுபடுவது மனிதாபிமானமற்றச் செயல்.
இந்திய குடிமைப் பணிகள்  போன்ற மத்தியப் பணியாளர் தேர்வுகளுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத நிலையில், நீட் தேர்வுக்கு மட்டும் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிப்பது மிகவும் கொடுமையானது. 
இதன் மூலம் தேர்வறைக்குள் செல்லும் மாணவர்களின் மனநிலையை பாதிப்படையச் செய்கின்றனர் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com