பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
பிளஸ் 1 பொதுத் தேர்வு  தமிழகம், புதுச்சேரியில் கடந்த மார்ச் 6  முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது.  இந்தத் தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 7,278 பள்ளிகளில் இருந்து 8, 16, 618 மாணவ,  மாணவியர் மற்றும் 5,032 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8,21, 650 பேர் புதிய பாடத் திட்டத்தில் எழுதினர்.  
அதேபோன்று கடந்த ஆண்டு மார்ச்  மற்றும் ஜூன் மாதங்களில் பிளஸ் 1 பொதுத் தேர்வை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாமல் இந்த ஆண்டு  பிளஸ் 2 படித்த 84,332 பள்ளி மாணவர்கள்,  தேர்ச்சி பெறாத பாடங்களை பழைய பாடத் திட்டத்திலேயே மீண்டும் மார்ச் 2019 பிளஸ் 2 பொதுத்தேர்வின்போது தேர்வு எழுதினர்.
மேலும் கடந்த ஆண்டு நேரடித் தனித்தேர்வராக தேர்வெழுதி தேர்ச்சி பெறாத 690 தேர்வர்கள் இந்த ஆண்டு பழைய பாடத்திட்டத்திலேயே பிளஸ் 1 பொதுத்தேர்வினை எழுதினர்.  இந்த நிலையில், பிளஸ் 1 பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள்,  நேரடித் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in        ஆகிய இணையதள முகவரிகளில் வெளியிடப்படவுள்ளது.
பள்ளி மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பப்படும்.  தனித் தேர்வர்களுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். 
மதிப்பெண் சான்றிதழ்:  பிளஸ் 1 பொதுத்தேர்வெழுதிய தேர்வர்களுக்கு இணையதளம் வழியாக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். அரசுத் தேர்வுத் துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் வரை மட்டுமே இந்த மதிப்பெண் பட்டியல் செல்லும்.
தேர்வர்கள் மே 14-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல் தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக தங்களது மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். 
தனித்தேர்வர்கள் தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தங்களது பிறந்த தேதி,  பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in  என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
தேர்வு முடிவுகள் வெளியானதும் விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும்,  தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மே 10 (வெள்ளிக்கிழமை), 11 (சனிக்கிழமை) , 13 (திங்கள்கிழமை) ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com