கோயில் சொத்துகளை மீட்கக் கோரிய வழக்கு: அரசு உரிய விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு  வழங்கப்பட்ட சொத்துக்களை மீட்கக் கோரிய வழக்கில், அரசு தரப்பில் உரிய விளக்கமளிக்க வேண்டுமென
கோயில் சொத்துகளை மீட்கக் கோரிய வழக்கு: அரசு உரிய விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

 
மதுரை: தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு  வழங்கப்பட்ட சொத்துக்களை மீட்கக் கோரிய வழக்கில், அரசு தரப்பில் உரிய விளக்கமளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமாக கொடையாளர்கள் பலரால் வழங்கப்பட்ட சொத்துக்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. குறிப்பாக, ஏரல் தாலுகாவில் சுமார் 219.54 ஏக்கர்  சொத்துகள் கோயிலுக்கு கட்டளையாகவும், தானமாகவும் வழங்கப்பட்டன.  

ஆனால் இந்த  நிலங்கள் தற்போது கோயிலின் கட்டுப்பாட்டிலோ அல்லது அதற்கு வருவாய் வழங்கும் வகையிலோ முறையாக பராமரிக்கப்படவில்லை. இந்நிலையில், மத்திய அரசால் தொழிற்சாலை அமைக்க கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இதற்கு இழப்பீடாக ரூ.6 லட்சத்து 42 ஆயிரத்து 669 செலுத்தப்பட்டது. ஆனால், இந்தத் தொகையின் நிலை என்ன என்பது தெரியவில்லை. கோயிலுக்கு கட்டளை பயன்பாட்டிற்கென வழங்கப்பட்ட நிலங்கள் தனிநபர்கள் சிலருக்கு சட்டவிரோதமாகப் பட்டா  வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கட்டளை பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட 219. 54 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து, அவற்றை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். மேலும், இதேபோல, தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு கட்டளை பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட சொத்துக்களை அளவீடு செய்து முறையாக கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.தண்டபாணி ஆகியோர் கொண்ட அமர்வில்  புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுகுறித்து அரசு தரப்பில் உரிய விளக்கமளிக்கமளிக்க வேண்டுமென   நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com