44 வாக்குச்சாவடிகளின் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண உத்தரவு: தேர்தல் ஆணையம் அதிரடி

தமிழகத்தில் 12 மக்களவைத் தொகுதிகளுக்குள்பட்ட 44 வாக்குச்சாவடிகளின் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களில் உள்ள சீட்டுகளை எண்ணுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி
44 வாக்குச்சாவடிகளின் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண உத்தரவு: தேர்தல் ஆணையம் அதிரடி


தமிழகத்தில் 12 மக்களவைத் தொகுதிகளுக்குள்பட்ட 44 வாக்குச்சாவடிகளின் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களில் உள்ள சீட்டுகளை எண்ணுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறினார்.
இந்த 44 வாக்குச் சாவடிகளில் மட்டும் ஒப்புகைச்சீட்டுகளில் உள்ள சின்னங்களை எண்ணிய பிறகே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 
இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சத்யபிரத சாகு வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாகச் செயல்படுகிறதா என்பதைப் பரிசோதிப்பதற்காக தேர்தல் அதிகாரிகள் மாதிரி வாக்குப்பதிவு நடத்தினர். அதில் 44 வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தியதில் மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்களில் அந்த வாக்குகளை அழிக்காமல், ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களில் விழுந்த சீட்டுகளை மட்டும் எடுத்துவிட்டனர். 
இந்த 44 வாக்குச்சாவடிகளில் மட்டும் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களில் உள்ள சீட்டுகளை  எண்ணுவதற்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக, ஒரு மக்களவைத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் என்பதுதான் விதி. ஆனால், இந்த 44 வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டுகளை மட்டும்தான் எண்ண வேண்டும். 
இதிலும் ஏதேனும் அரசியல் கட்சிகள்  சந்தேகம் எழுப்பினால், தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்து, அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சத்யபிரத சாகு.
மாதிரி வாக்குப்பதிவை அழிக்காததால் நடந்த தவறு: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாகச் செயல்படுகிறதா என்பதைப் பரிசோதிப்பதற்காக  வாக்குப்பதிவுக்கு முன்பு அதிகாலையிலேயே தேர்தல் அதிகாரிகள் மாதிரி வாக்குப்பதிவை நடத்தினர். இந்த வாக்குகளை அழிக்காமலேயே 47 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுகள் நடந்துள்ளன. 
இது தொடர்பாக வந்த புகாரைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு தமிழகத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இதுகுறித்து தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் 3 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதே நேரம், மீதமுள்ள 44 வாக்குச்சாவடிகளுக்கு ஒப்புகைச்சீட்டை மட்டும் எண்ணினால் போதும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கை: விவிபாட் என்னும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் இந்தத் தேர்தலில்தான்  செயல்பாட்டுக்கு வந்ததுள்ளன. எந்தக் கட்சியின் சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வகையில் இயந்திரத்தில் ஒப்புகைச்சீட்டு 7 விநாடிகள்  கண்முன் தோன்றி, இயந்திரத்துக்குள்ளேயே விழுந்துவிடும்.  இதற்கு வாக்காளர்கள் மத்தியிலும் அரசியல் கட்சியினர் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது. 
தற்போது, 44 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தாமல் எண்ணி முடிக்கும் வகையில் இந்த இயந்திரம் கைகொடுத்துள்ளது. மாதிரி வாக்குப்பதிவின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குகளை அழிக்காமல்,  மாதிரி ஒப்புகைச்சீட்டுகளை மட்டும் அகற்றிவிட்டதால் அந்த,  44 வாக்குச்சாவடிகளில் மட்டும் ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்பட உள்ளன.
வாக்கு எண்ணிக்கை:  மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளிலும் மே 23-ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். அதேபோல்,  44 வாக்குச்சாவடிகளிலும்  ஒப்புகைச்சீட்டுகள் மே 23-ஆம் தேதியே எண்ணப்பட உள்ளன.
44 வாக்குச்சாவடிகள்:  வடசென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர்,  கடலூர்,  தஞ்சாவூர்,  தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 12 மக்களவைத் தொகுதிகளுக்குள்பட்ட 44 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச்சீட்டுகளின் எண்ணிக்கை மூலம் தேர்வு முடிவுகள் தீர்மானிக்கப்பட உள்ளன.
அரசியல் கட்சிகள் ஏற்குமா?: ஒப்புகைச்சீட்டு மூலம் எண்ணி வரும் முடிவுகளை அரசியல் கட்சிகள் அனைத்தும் ஏற்குமா என்பது சந்தேகம்.  பெருவாரியான வித்தியாசங்களில் ஒரு வேட்பாளர் வெற்றிபெற்றுவிட்டால் பிரச்னை எழுவதற்கு வாய்ப்பு இல்லை. அதேசமயம், குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவராக இருந்தால், அவரின் தொகுதியில் வரும் வாக்குச்சாவடியில் ஒப்புகைச்சீட்டின் மூலம் எண்ணப்பட்டிருந்தால், அந்த முடிவுகளை தோற்றவர்கள் ஏற்பார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 
அதேசமயம், ஒப்புகைச்சீட்டை ஏற்காமல், அதிலும் குளறுபடி இருப்பதாக புகார் தெரிவித்தால், அது குறித்து தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்து நடவடிக்கை எடுப்போம் என்று சத்ய பிரத சாகு கூறியுள்ளார்.

ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்படும் வாக்குச்சாவடிகள்
* வடசென்னை - திரு.வி.க. நகர் சட்டப்பேரவைத் தொகுதி - பனந்தோப்பு ரயில்வே காலனி வாக்குச் சாவடி எண் 40. 
* காஞ்சிபுரம் - திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதி-  தண்டலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி எண் 132 (இந்த வாக்குச்சாவடியில் மக்களவைத் தேர்தலுக்கும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் தனித்தனியாக ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட உள்ளன) 
* கிருஷ்ணகிரி - வேப்பனஹள்ளி சட்டப்பேரவைத் தொகுதி- வாக்குச்சாவடி எண் 103. ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதி- வாக்குச்சாவடி எண்கள் 63 மற்றும் 352. 
* சேலம் - ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதி - வாக்குச்சாவடி எண் 52. எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதி - வாக்குச்சாவடி எண்கள் 128 மற்றும் 223.  வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதி - வாக்குச்சாவடி  எண் 161.
* பெரம்பலூர் -  லால்குடி சட்டப்பேரவைத் தொகுதி - வாக்குச்சாவடி எண் 181. 

 * துறையூர் சட்டப்பேரவை தொகுதி - வாக்குச்சாவடி எண் 85. முசிறி - வாக்குச்சாவடி எண்கள் 117 மற்றும் 198.
* கடலூர் -  பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதி - வாக்குச்சாவடி எண் 120.  கடலூர் சட்டப்பேரவைத் தொகுதி - வாக்குச்சாவடி எண்கள் 50,  61,  226. குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவைத் தொகுதி - வாக்குச்சாவடி எண்  185.
* தஞ்சாவூர் -  தஞ்சாவூர் சட்டப் பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி எண்கள் 43 மற்றும் 183.
(இதே வாக்குச்சாவடியில் இடைத்தேர்தலுக்கான ஒப்புகைச் சீட்டுகளும் எண்ணப்பட உள்ளன).  ஒரத்தநாடு 
சட்டப்பேரவைத் தொகுதி- வேதவிஜயாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி வாக்குச்சாவடி எண் 269,  
* மன்னார்குடி  சட்டப்பேரவைத் தொகுதி -  வாக்குச்சாவடி எண் 37.
தூத்துக்குடி - விளாத்திக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி எண் 193. (இதே வாக்குச்சாவடியில் இடைத்தேர்தலுக்கான ஒப்புகைச் சீட்டுகளும் எண்ணப்பட உள்ளன).
* கன்னியாகுமரி -  விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி- இடைக்கோடு எம்.என்.எம்.எச்.எஸ்ஸில் வாக்குச்சாவடி எண்கள் 64 மற்றும் 65 . கிள்ளியூர் சட்டப்பேரவைத் தொகுதி-  கோழிவிளை, களியக்காவிளை அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி எண் 99. 
* நாகப்பட்டினம் - கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதி-  வெண்மணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி  வாக்குச்சாவடி எண் 100, வேதாரண்யம் புனித அந்தோணி மெட்ரிகுலேஷன் உயர்நிலை பள்ளி வாக்குச்சாவடி எண் 200,  திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி-  வாக்குச்சாவடி எண்கள் 80 மற்றும் 215. திருவாரூர் சட்டப்பேரவை தொகுதி - குழிக்கரை அரசு உயர்நிலை பள்ளி வாக்குச்சாவடி எண் 92. (அதே  வாக்குச்சாவடியில் இடைத்தேர்தலுக்கான ஒப்புகைச் சீட்டுகளும் எண்ணப்பட உள்ளன). 
* தென்காசி -  தென்காசி சட்டப்பேரவை தொகுதி- வாக்குச் சாவடி எண்கள் 114 மற்றும் 315 .
* திருநெல்வேலி -  ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி- வாக்குச்சாவடி எண்கள் 40 மற்றும் 76,  திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி - வாக்குச்சாவடி எண் 187,  அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி- வாக்குச்சாவடி எண் 180 , நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி- வாக்குச்சாவடி எண்கள்63 மற்றும் 121.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com