குழந்தை விற்பனை: சேலத்தில் ஆரம்ப சுகாதார நிலைய பெண் ஊழியரை கைது செய்தது சிபிசிஐடி

குழந்தை விற்பனை வழக்கு குறித்து விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர், சேலம் சர்கார், கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் சாந்தி என்பவரை கைது செய்துள்ளனர்.
குழந்தை விற்பனை: சேலத்தில் ஆரம்ப சுகாதார நிலைய பெண் ஊழியரை கைது செய்தது சிபிசிஐடி


குழந்தை விற்பனை வழக்கு குறித்து விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர், சேலம் சர்கார், கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் சாந்தி என்பவரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைதான நிலையில் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் பெண் ஊழியரை ஆஜர்படுத்த நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்துக்கு  அழைத்து வருகிறது சிபிசிஐடி காவல்துறை.

ராசிபுரத்தில் நடந்த குழந்தை விற்பனை விவகாரத்தில் தொடர் விசாரணைக்குப் பிறகு இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம்,  ராசிபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதா என்ற அமுதவள்ளி(50) என்பவர்,  கடந்த 25-ஆம் தேதி குழந்தை விற்பனை தொடர்பாக, வாட்ஸ்அப்பில் பேசியது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.  அதனைத் தொடர்ந்து, காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு உத்தரவின்பேரில்,  மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில் தொடர்புடைய அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், ஈரோட்டைச் சேர்ந்த பர்வீன், ஹசீனா, அருள்சாமி, லீலா, செல்வி ஆகிய எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.  ராசிபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில்,  கடந்த வெள்ளிக்கிழமை (மே 3) வழக்கு தொடர்பான ஆவணங்களை, விசாரணை அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணன்,  காவல் ஆய்வாளர்கள் சாரதா,  பிருந்தா உள்ளிட்டோர் விசாரித்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமுதா,  அருள்சாமி, முருகேசன் ஆகிய மூன்று பேரையும், காவலில் எடுத்து விசாரிப்பதற்காக,  நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன்,  ஆய்வாளர்கள் பிருந்தா, சாரதா உள்ளிட்டோர் செவ்வாய்கிழமை மனு தாக்கல் செய்தனர்.  அன்று பிற்பகலில் நடந்த மனு மீதான விசாரணையில்,  அமுதாவுக்கு இரு நாள்(மே 8, 9) காவலும், அருள்சாமி, முருகேசனுக்கு மூன்று நாள்(மே 8, 9,10) காவலும் வழங்கி, நீதிபதி கருணாநிதி உத்தரவிட்டதுடன்,  வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு அமுதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். 

அதனைத் தொடர்ந்து, மூன்று பேரையும் ரகசிய இடத்தில் வைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், அமுதாவை வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு, தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி கருணாநிதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.  அதையடுத்து, வரும் 23-ஆம் தேதி அமுதாவை மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.  அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அருள்சாமி, முருகேசன் ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 6 மணிக்கு, நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

பர்வீன்பானு,  ஹசீனாவை காவலில் எடுத்து விசாரணை: சிபிசிஐடி போலீஸார்,  அமுதா, அருள்சாமி, முருகேசனை காவலில் எடுத்து விசாரித்த நிலையில்,  ஈரோட்டைச் சேர்ந்த கருமுட்டை இடைத்தரகர்களான பர்வீன்பானு, ஹசீனா என்ற நிஷாவை காவலில் எடுத்து விசாரிக்க,  தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 5 மணியளவில் மனு தாக்கல் செய்தனர்.  

அந்த மனுவை விசாரித்த நீதிபதி கருணாநிதி,  இருவரையும் ஒரு நாள்(மே 10) காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.  வெள்ளிக்கிழமை பிற்பகல் 6 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிபதி அறிவுறுத்தினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com