தென் மாநிலங்களை உளவு பார்த்த வழக்கு: பாகிஸ்தான் உளவாளி இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்

தென் மாநிலங்களை உளவு பார்த்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் தண்டனை அனுபவித்து வந்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகிர் உசேன் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.


தென் மாநிலங்களை உளவு பார்த்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் தண்டனை அனுபவித்து வந்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகிர் உசேன் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை பாகிஸ்தான் நாட்டின் ஐ.எஸ்.ஏ. உளவு அமைப்புக்கு ரகசிய தகவல்களையும், புகைப்படங்களை சேகரித்து அனுப்பியதாக கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி க்யூ பிரிவு போலீஸார், சென்னையில் இலங்கையைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ.க்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. நடத்திய விசாரணையில், ஜாகிர் உசேன் துணி வியாபாரி எனக் கூறிக் கொண்டு, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம், பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் தூதரகம், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், முக்கியமான வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் கடற்கரை, வணிக மையங்கள் ஆகியவற்றை உளவு பார்த்து, புகைப்படம் எடுத்து ஐ.எஸ்.ஐ.க்கு அனுப்பியிருப்பது தெரியவந்தது. 
 ஜாகிர் உசேன் கொடுத்த தகவலின் அடிப்படையில், வியாசர்பாடியைச் சேர்ந்த ரபீக் என்ற நூருதீன், முகம்மது சலீம், சிவபாலன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  இவர்களிடம் நடத்திய விசாரணையில், ஐ.எஸ்.ஐ. அமைப்புக்காக உளவு வேலை செய்து வந்த 4 பேரும், பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட இந்திய கள்ள ரூபாய் நோட்டுகளையும் தென் மாநிலங்களில் புழக்கத்தில் விட்டு வருவதும் தெரியவந்தது.
மேலும், இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அமீர் சுபையர் சித்திக் கூறியதன் பேரில், 5 பேரும் இவ்வாறு செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள், அமீரையும் இந்த வழக்கில் சேர்த்தனர்.
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்: இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் வழக்கின் முதல் குற்றவாளியான ஜாகிர் உசேனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்தது.  இத் தண்டனையை அவர், புழல் சிறையில் அனுபவித்தார். அங்கு, ஜாகிர் உசேன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால், கடந்தாண்டு சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் ஜாகிர் உசேனின் தண்டனைக் காலம் கடந்த மாதம் 28-ஆம் தேதி நிறைவு பெற்றது.  சிறையில் இருந்து வெளியே வந்த அவரை, மத்திய உள்துறை அனுமதியுடன்  என்.ஐ.ஏ. அதிகாரிகளும், போலீஸாரும் இலங்கையின் தலைநகர் கொழும்புவுக்கு விமானத்தில் அனுப்பி வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com