அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல்ஹாசனுக்கு எதிராக வழக்குப் பதிவு 

'ஹிந்து தீவிரவாதி' பேச்சிற்காக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல்ஹாசனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல்ஹாசனுக்கு எதிராக வழக்குப் பதிவு 

அரவக்குறிச்சி: 'ஹிந்து தீவிரவாதி' பேச்சிற்காக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல்ஹாசனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

பயங்கரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு. பயங்கரவாதம் இருதரப்பிலும் உள்ளது. உண்மையான முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை ஏற்க மாட்டார்கள்.

முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் நான் இதைச் சொல்லவில்லை. காந்தியாரின் சிலைக்கு முன்பு நின்று கொண்டு இதைச் சொல்கிறேன். ஏனென்றால் நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே  என்றார்.

அவரது இந்த பேச்சு தேசிய அளவில் கடும் சர்ச்சையினை உண்டாக்கியது. அவர் பிரசாரம் செய்ய தடைகோரியும், அவரது கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அத்துடன் 'ஹிந்து சேனா' என்ற அமைப்பை சேர்ந்த விஷ்ணு குப்தா என்பவர் தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கமலுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் 'ஹிந்து தீவிரவாதி' பேச்சிற்காக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல்ஹாசனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹிந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   

இந்த வழக்கானது 155 A மற்றும் 295A ஆகிய ஒரு பிரிவுகளின் கீழ் தொடரப்பட்டுள்ளது. அதில் இரு பிரிவினருக்கு இடையே பகைமை உணர்வைத் தூண்டுதல் மற்றும் குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு எதிராக துவேஷத்தை தூண்டும் கருத்துக்களை பரப்புதல் தொடர்பானதாகும்.

அதேசமயம் சென்னையை அடுத்துள்ள மடிப்பாக்கத்திலும் கமல் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் குமார் தலைமையில் சுமார் 50 பேர் திரண்டு வந்து காவல்;நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதையடுத்து அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com