தமிழகத்தில் எவர் உயிருக்கும் பாதுகாப்பற்ற நிலை: இ.கம்யூ., கவலை 

தமிழகத்தில் எவர் உயிருக்கும் பாதுகாப்பற்ற நிலை நிலவி வருகிறது என்று இந்திய கம்யூயூனிஸ்ட் கவலை தெரிவித்துள்ளது
தமிழகத்தில் எவர் உயிருக்கும் பாதுகாப்பற்ற நிலை: இ.கம்யூ., கவலை 

சென்னை: தமிழகத்தில் எவர் உயிருக்கும் பாதுகாப்பற்ற நிலை நிலவி வருகிறது என்று இந்திய கம்யூயூனிஸ்ட் கவலை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் சட்டம்ஒழுங்கு பெரும் கேள்விக்குரியாகி வருவது மிகுந்த கவலை அளிக்கின்றது. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை தொடர்ந்து நீடித்து வருவது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பொது வெளியில் கூட பெண்கள் தனியாக செல்ல முடியாத அளவிற்கு, அவர்கள் அணிந்துள்ள நகைகளை அபரிக்கும் சமூக விரோதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

பாலியல் வன்கொடுமையின் உச்சத்தில் பொள்ளாச்சி சம்பவம் தமிழகத்தையே தலைகுனிய வைத்துள்ளது. ஆண்டுகணக்கில் இத்தகைய சமூக விரோத செயல்களை செய்திட இயலும் என்றால் பெரிய இடத்துபிள்ளைகள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் கேட்பார் யாரும் இல்லை என்று நிலை உருவாகி உள்ளது.   அதன் விளைவுகள் எத்தகைய சீரழிவை ஏற்படுத்தும் என்பதனை இன்றைய பொறுப்பில் உள்ளோர் உணர்ந்து, சமூக விரோத கும்பலை காப்பாற்றும் நிலையை கைவிட்டு, யாராக இருப்பினும் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு குற்றவாளிகளை உடனடியாக சட்டரீதியாக தண்டிக்க வேண்டும்.

கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் கல்லூரி மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.  இதனைப் போன்ற கொடூர சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இச்சம்பவங்களில் தொடர்புடையோர் யார் என்பது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டு, தண்டிக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

குழந்தைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவது. பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி சீரழிப்பது போன்ற சம்பவங்கள் ஒன்றின் பின் ஒன்றாக தொடர்வது, மிகுந்த கவலைக்கும், வேதனைக்கும் உரிய ஒன்று என்பது மட்டுமல்ல தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று உள்ளதா? எனக் கேள்வி எழுகின்றது.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை, தடியடியை குறுப்படம் தயாரித்து வெளியிட்ட சமூக ஆர்வலர் முகிலன் கதி என்ன ஆனது என்ற வினாவிற்கு பல மாதங்கள் ஆன நிலையிலும் பதில் இல்லை என்பது மூலம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பது உறுதிப் படுத்தப்படுகின்றது.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, ஒவ்வொருவரின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, மாநில அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com