பாஜகவுடன் பேசியதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயார்: ஸ்டாலின் ஆவேசம் 

பாஜகவுடன் பேசியதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாஜகவுடன் பேசியதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயார்: ஸ்டாலின் ஆவேசம் 

சென்னை: பாஜகவுடன் பேசியதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மோடியுடனும் ஸ்டாலின் பேசி வருகிறார்.  பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என தெரிந்துதான் எங்களுடன் பேசி வருகிறார்” என்று “பச்சைப் பொய்” நிறைந்த ஒரு பேட்டியை பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அளித்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோல்வியின் விளிம்பிற்கு சென்று விட்ட பா.ஜ.கவிற்கு இதுபோன்று குழப்பங்களை விதைப்பது கைதேர்ந்த விளையாட்டு. ஆனால் பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் பிறந்த திருமதி தமிழிசை சவுந்திரராஜன் இப்படியொரு “பொய்” பேட்டியை அளிப்பதற்காக தன்னை இந்த அளவிற்கு தரம் தாழ்த்திக் கொண்டு விட்டாரே என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தியை முதன்முதலில் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது திராவிட முன்னேற்றக் கழகம் தான். அதே நேரத்தில் ஐந்தாண்டு காலத்தில் மக்களுக்கு சொல்லொணாத் துயரத்தை அளித்த பிரதமர் திரு நரேந்திர மோடியை “பாசிஸ்ட்” “சேடிஸ்ட்” “சர்வாதிகாரி” என்று முதன்முதலில்  விமர்சித்தது மட்டுமின்றி, “மீண்டும் இந்தியாவின் பிரதமராக திரு நரேந்திர மோடி வரவே கூடாது” என்று சென்னையில் மட்டுமல்ல - கல்கத்தாவிலும், டெல்லிலும் மாறி மாறி பிரச்சாரம் செய்தவனும் அடியேன்தான்.

தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியிலும் அதே பிரச்சாரத்தை செய்திருக்கிறேன். நடைபெறவிருக்கின்ற நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் மே 23 ஆம் தேதியுடன் பிரதமர் திரு மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்பதை உறுதியாகவும், இறுதியாகவும் பேசி வருகிறேன்.

இதைப் பொறுக்க முடியாத பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் கடைந்தெடுத்த அரசியல் கயமைத்தனம் மூலம் அ.தி.மு.கவை மிரட்டி கூட்டணி வைத்தது போல், இட்டுக்கட்டிய பேட்டிகளை கற்பனைக் குதிரைகள் போல் தட்டி விட்டு தி.மு.க.வை வம்புக்கு இழுக்க முயற்சிக்கிறார்கள்.

மக்களவைத் தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவிருக்கின்ற நிலையில் திரு ராகுல் காந்தி அவர்களை பிரதமராக முன்னிறுத்திய தி.மு.க.வின் பிரச்சாரத்தை முனை மழுங்கச் செய்து விடலாம் என்றும் “தப்புக் கணக்கு”ப் போட்டு திருமதி தமிழிசை இந்த பேட்டியை திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு கொடுத்திருக்கிறார். குறிப்பாக அ.தி.மு.க அமைச்சர் திரு ஜெயக்குமார் சொன்னதை திருமதி தமிழிசை சவுந்திரராஜன் வழி மொழிந்திருக்கிறார் என்றால் ஊழல் அ.தி.மு.கவை எப்படியாவது இந்த நான்கு இடைத் தேர்தலிலாவது தோல்வியடைய விட்டுவிடக் கூடாது என்று “போகாத ஊருக்கு பொய்யான வழி தேடியிருக்கிறார்”!

திராவிட முன்னேற்றக் கழகம், “அ.தி.மு.க- பா.ஜ.க” போல் திரைமறைவில் “தரகு”பேசும் கட்சியல்ல. கொள்கையை பகிரங்கமாக அறிவித்து- யார் பிரதமர் என்பதை முன்கூட்டியே மக்களிடம் எடுத்துக் கூறி- யார் பிரதமராகக் கூடாது என்பதை இன்னும் தெளிவாக எடுத்துரைத்து தேர்தலைச் சந்தித்து வருகின்ற கட்சி.

திருமதி தமிழிசை சவுந்திரராஜனோ அல்லது அவர் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று ஆசைப்படும் திரு நரேந்திர மோடியோ “மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன்” என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயாராக இருக்கிறேன். அப்படி இருவரும் நிரூபிக்கத் தவறினால் திரு நரேந்திர மோடியும், மாநில பா.ஜ.க. தலைவராக இருக்கும் திருமதி தமிழிசை சவுந்திரராஜனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com