கமல்ஹாசன் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு

தமிழகத்தில் 5 நாள்கள் தேர்தல் பிரசாரம் செய்ய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு தடை விதிக்க வேண்டும் என பாஜக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு


தமிழகத்தில் 5 நாள்கள் தேர்தல் பிரசாரம் செய்ய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு தடை விதிக்க வேண்டும் என பாஜக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தில்லி பாஜக செய்தித் தொடர்பாளரும், உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய்,  தேர்தல் ஆணையத்தில்  திங்கள்கிழமை அளித்த மனுவில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  தமிழகத்தின் அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சேவை, சுதந்திர இந்தியாவின் முதல் ஹிந்து பயங்கரவாதி எனக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் லாபத்துக்காக சிறுபான்மையினர் இருந்த பகுதியில் இதுபோன்ற மத ரீதியிலான பிரசாரத்தை கமல்ஹாசன் செய்துள்ளார். இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, தவறான செயல்பாடாகும். மேலும், இரு மதத்தினருக்கு இடையே பிரிவினையை உருவாக்க கமல்ஹாசன் திட்டமிட்டு முயற்சி செய்கிறார்.
இதுவும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி குற்றமாகும். நாட்டில் சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடத்துவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்பதை உச்சநீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளது. எனவே, தமிழகத்தில் 5 நாள்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட கமல்ஹாசனுக்கு தடை விதிக்க வேண்டும். இந்திய குற்றவியல் சட்டப்படி உரிய பிரிவுகளில் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், அவரது கட்சியின் பதிவை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
தமிழக பாஜக புகார் மனு
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலுக்கு எதிராக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவிடம் தமிழக பாஜக புகார் மனு அளித்துள்ளது. இதுகுறித்து, பாஜக சார்பில் மாநில சட்டப் பிரிவுத் தலைவர் ஆர்.சௌந்தரராஜன் திங்கள்கிழமை அளித்த புகார் மனு விவரம்:
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப் பேரவை  இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசும்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே எனப் பேசியுள்ளார்.
அவர் பிரசாரம் செய்த பள்ளப்பட்டி கிராமம் என்பது முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். அவரது பேச்சு அரவக்குறிச்சி பகுதியில் மத ரீதியான நெருக்கடிகளுக்கு வழிவகுப்பதுடன், பதற்றத்தை உருவாக்கும். மேலும், கமலின் பேச்சு, தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்டுள்ள நடத்தை நெறிமுறைகளுக்கு எதிரானதாகும்.
எனவே, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
கமலுக்கு தமிழிசை கண்டனம்
 மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் இந்து தீவிரவாதம் குறித்த கருத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம், இந்து தீவிரவாதம் என்று கமல்ஹாசன் பேசியிருக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. புதிய அரசியலை முன்னெடுக்கிறோம் என்று சொல்லும் கமல்ஹாசன் பழைய, விஷமத்தனமான, விஷம் பொருந்திய பிரித்தாளும் வாக்கு அரசியலில் தானும் கீழ்த்தரமாகத்தான் நடந்து கொள்வேன் என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிக்குச் சென்று இந்து தீவிரவாதம் என்று பேசும் கமலின் கருத்து விஷமத்தனமான, உள்நோக்கம் கொண்டது. இத்தகைய நோக்கம் கொண்டவர்களின் பிரசாரத்தை தடை செய்யப்பட வேண்டும்.  காவல் துறை அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திரை நடிப்பு முடிந்து வாய்ப்புக் கிடைக்காத கமல், அரசியல் வாய்ப்புக்காக கண்டபடி பேசுவது கண்டிக்கத்தக்கது என்று பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com