தமிழகத்தில்  உள்கட்டமைப்பு வசதிகளில்லாத 92 பொறியியல் கல்லூரிகள்!

தமிழகத்தில் உரிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் 92 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வந்தது  ஆய்வில் கண்டறியப்பட்டதால்,  இந்தக்
தமிழகத்தில்  உள்கட்டமைப்பு வசதிகளில்லாத 92 பொறியியல் கல்லூரிகள்!


தமிழகத்தில் உரிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் 92 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வந்தது  ஆய்வில் கண்டறியப்பட்டதால்,  இந்தக் கல்லூரிகளில்  இளநிலை பிரிவின் மாணவர் சேர்க்கையை 50 சதவீதமாகக்  குறைத்தும், முதுநிலைப்பிரிவின் மாணவர் சேர்க்கைக்கு  முழுமையாகத் தடை விதித்தும்  அண்ணா பல்கலைக்கழகம்  நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகள், ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை அந்தந்த மாநில பல்கலைக்கழகங்கள் மூலமாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக ஏஐசிடிஇ-யிடம் அனுமதி பெறவேண்டும். இந்த அனுமதிக்காக விண்ணப்பிக்கும்போது அல்லது, புதிதாகத் தொடங்கப்படும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு முன்பாக அண்ணா பல்கலைக்கழகக் குழு ஆய்வு நடத்தும். இந்த ஆய்வின்போது, ஏஐசிடிஇ வழிகாட்டுதலின்படி பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:20 என்ற அடிப்படையில் இருக்கிறதா, ஆசிரியர் கல்வித் தகுதி, ஆய்வகம், கணினிகளின் எண்ணிக்கை, இணையதள வசதி, வகுப்பறைகள் என்பன உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் ஏஐசிடிஇ வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைந்திருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்படும். அவ்வாறு வழிகாட்டுதலை முறையாக பின்பற்றாத கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் குறைக்கப்படும் அல்லது அனுமதி முழுமையாக நிறுத்தப்படும்.
அந்த வகையில் 2019-20 -ஆம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள 537 பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், உரிய விளக்கம் அளிக்கத் தவறிய 92 பொறியியல் கல்லூரிகள் மீது அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியது:
2019-20 கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள 537 பொறியியல் கல்லூரிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்தக் கல்லூரிகள் மூலம் இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகள் என மொத்தம் 3,523 படிப்புகள் வழங்கப்பட்டு வந்தன. இதில் முதல்கட்டமாக உள்கட்டமைப்பு வசதிகளை உரிய முறையில் பூர்த்தி செய்த 287 பொறியியல் கல்லூரிகளின் 2,678 இளநிலை, முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
உள்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 250 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் வழங்கியதோடு, நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய கால அவகாசமும் வழங்கப்பட்டது. இதில், நிபந்தனைகளை உரிய முறையில் பூர்த்தி செய்த மேலும் 158 பொறியியல் கல்லூரிகளின் 421 இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. மீதமுள்ள 92 பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகம் வழங்கிய கால அவகாசத்துக்குள் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாததுடன், உரிய விளக்கமும் அளிக்கவில்லை.
300 படிப்புகளில் மாணவர் சேர்க்கை குறைப்பு: இதன் காரணமாக இந்த 92 பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் 125 பி.இ., பி.டெக். இளநிலை பொறியியல் படிப்புகளில் 2019-20 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 53 இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
அதோடு, இந்தக் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த 122 எம்.இ., எம்.டெக். போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com