நடிகர் சங்க அவசர செயற்குழுக் கூட்டம்: சென்னையில் இன்று நடக்கிறது

 தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம்  சென்னையில் செவ்வாய்க்கிழமை நடக்கிறது. சங்கத்தின் தேர்தலை நடத்துவது குறித்தும்,  அதற்கான முதற்கட்ட வேலைகள் தொடங்குவது
நடிகர் சங்க அவசர செயற்குழுக் கூட்டம்: சென்னையில் இன்று நடக்கிறது


 தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம்  சென்னையில் செவ்வாய்க்கிழமை நடக்கிறது. சங்கத்தின் தேர்தலை நடத்துவது குறித்தும்,  அதற்கான முதற்கட்ட வேலைகள் தொடங்குவது குறித்தும் இதில் விவாதிக்கப்படவுள்ளது. 
  2015 -18-ஆம் ஆண்டுகளுக்கு நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி நடைபெற்றது. இதில் நாசர் தலைமையிலான அணியும், சரத்குமார் தலைமையிலான அணியும் களம் கண்டன. இரு அணிகளுக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில் நாசர் தலைமையிலான அணி பெரும்பான்மையான பதவிகளைக் கைப்பற்றி நிர்வாகத்துக்கு வந்தது.  
இந்த நிர்வாகத்தின் பதவிக் காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது.  ஆனால்,  சங்கக் கட்டடப் பணிகளைக் காரணம் காட்டி தேர்தலை 6 மாதங்களுக்கு தள்ளி வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
தற்போது அந்த காலக்கெடு முடிவுக்கு வந்து விட்டதால், தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில், தற்போது அவசர செயற்குழுக் கூட்டம் நடக்கவுள்ளது.  இதில், தேர்தல் நடத்துவதற்கான வேலைகள் பற்றி ஆலோசிக்கப்படவுள்ளது. 
தேர்தல் அதிகாரி  நியமனம் குறித்து...:  தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதியை  நியமிப்பது குறித்து  இந்த செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.  நியமிக்கப்படும் தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்துவதற்கான தேதி மற்றும் தேர்தல் நடைபெறும் இடத்தை அறிவிப்பார். வாக்காளர் பட்டியலையும் அவரே வெளியிடுவார். 
மீண்டும் விஷால் அணி: இந்தத் தேர்தலில் விஷால் அணியினர் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. நாசர், விஷால் இருவரும் தற்போது வகித்து வரும் பதவிகளுக்கு மீண்டும் போட்டியிடுகின்றனர். பூச்சி முருகன் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் எனத் தெரிகிறது. 
கார்த்தி மீண்டும் பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். விஷால் அணியில் ஏற்கெனவே செயற்குழு உறுப்பினர்களாக இருந்தவர்கள், மீண்டும் அதே பதவிக்கு  போட்டியிடுகின்றனர். 
களம் இறங்கும் ராதிகா?:  விஷால்  அணிக்கு எதிராக இந்த முறை ராதிகா சரத்குமாரை எதிர் அணியினர் நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக விஷால் வகித்து வந்த செயலாளர் பதவிக்கு  பலர் களம் காண உள்ளனர். கடந்த முறை அவர் அணியில்  இருந்த நடிகர் உதயா, விஷாலை எதிர்த்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். 
இதே போல் நடிகர் ஆர்.கே.சுரேஷும் விஷாலுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். டி.ராஜேந்தர், எஸ்.வி.சேகர், கே.ராஜன் உள்ளிட்ட  மூத்த நடிகர்கள் பலரும் புது வியூகங்களை வகித்து வருகின்றனர். கடந்த முறை துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியடைந்த  நடிகர் சிம்பு இந்த முறையும் களம் இறங்க வாய்ப்புள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com