சுடச்சுட

    

    ஆலங்குடி சமூக சேவகருக்கு ரூ. 10 லட்சத்தில் புதிய வீடு நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கினார்

    By DIN  |   Published on : 21st May 2019 10:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    lw

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் கஜா புயலால் வீட்டை இழந்து தவித்த சமூக சேவகர் 515 எஸ். கணேசனுக்கு ரூ. 10 லட்சத்தில் கட்டிக் கொடுத்த வீட்டை நடிகர் ராகவா லாரன்ஸ் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
     புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்தவர் 515 கணேசன் என்றழைக்கப்படும் எஸ். கணேசன் (78). ஏழை, எளியோருக்கு உதவும் மனம் கொண்ட இவர் தனது 515 என்ற எண்ணுள்ள காரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சடலங்களை பணம் வாங்காமல் ஏற்றிச் சென்றுள்ளார். மேலும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளை இலவசமாக உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உதவியுள்ளார். மேலும், சென்னை, கேரள பெருவெள்ள பாதிப்புக்கும், தானே உள்ளிட்ட புயல் பாதிப்பின்போதும் காரில் சென்று நிதி திரட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியுள்ளார். இவரின் சேவையைப் பாராட்டி, பெங்களூர் பல்கலைக்கழகம் ஒன்று கடந்தாண்டு இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவப்படுத்தியது.
     இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தில் கணேசனின் ஓட்டு வீடும் தப்பவில்லை. வீடு சேதமடைந்து, உதவ யாருமின்றி குடும்பத்துடன் தவித்து வந்தார் கணேசன். இதையறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ், ஆலங்குடிக்கு வந்து கணேசனை சந்தித்து ஆறுதல் கூறி புதிய வீடு கட்டித் தருவதாக உறுதியளித்தார். அதோடு, புதுக்கோட்டையில் 2 நாள்கள் தங்கி ரூ.10 லட்சத்தில் வீடு கட்டும் பணியையும் தொடங்கி வைத்துச் சென்றார்.
     இந்நிலையில், புதிய வீடு கட்டும் பணி அண்மையில் நிறைவடைந்ததையடுத்து அந்த வீட்டை சமூக சேவகர் கணேசனுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ் கூறுகையில், நான் பலருக்கு உதவி வந்தாலும், ஆயிரக்கணக்கான மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வரும் 515 கணேசன் புயல் பாதிப்பில் வீடிழந்து நின்றது எனக்கு பெரும் மனவேதனையை ஏற்படுத்தியது. இதற்காக அவருக்கு நான் புதிய வீடு கட்டிக் கொடுத்ததும், அதில் அவர் குடும்பத்துடன் குடியேறியதும் அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்.
     515 கணேசன் கூறுகையில், ஆயிரக்கணக்கான மக்களுக்கு பிரதிபலன் பாராமல் நான் செய்த உதவியே ராகவா லாரன்ஸ் வடிவில் பிரதிபலனாக புதிய வீடு கிடைத்துள்ளது. புயலால் வீடிழந்து நின்றபோது ராகவா லாரன்ஸ் செய்த உதவி மிகப்பெரியது. அதை என்றும் மறக்க மாட்டேன்; அவர் எனக்கு மூத்த மகன் போன்றவர் என்றார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai