
பாஜகவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருப்பது உண்மைதான் என்றார் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவதோடு, நடைபெறவுள்ள 4 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும்.
அதற்கான சூழலே தற்போது உள்ளது. அதனாலேயே எதிர்க்கட்சிகள் பதற்றத்தில் உள்ளன. அதிமுகவும், பாஜகவும் எந்தக் குழப்பதிலும், பதற்றத்திலும் இல்லை. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின்தான் குழப்பத்தில் உள்ளார்.
தாமரை எப்போதும் தண்ணீரில் இருப்பதால் தாகம் இருக்காது. ஸ்டாலின்தான் பதவிப் பசியில் உள்ளார்.
பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் வாகனங்கள் சோதனையிடப்பட்டுள்ள நிலையில், தற்போது திமுக தலைவர் ஸ்டாலினின் பிரசார வாகனத்தில் சோதனை நடத்தப்பட்டதற்கு பதற்றமடைகின்றனர். வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக பொருளாளர்தான் காரணம்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டு அவர் பதவி விலக வேண்டும். அவரது கட்சிக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதுடன் அவரது பரப்புரையும் தடை செய்யப்பட வேண்டும். கமல்ஹாசனுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பாஜகவுடன் பேசிக் கொண்டிருப்பது உண்மைதான். திமுக நிறம் மாறும் கட்சி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ராகுல்தான் பிரதமர் என்பதை ஸ்டாலின் உறுதியாக ஏன்
கூற மறுக்கிறார்? ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்ததற்கு முதலில் வருத்தப்படப்போவது ஸ்டாலின்தான். மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு இல்லை. எத்தனை அணிகள் ஏற்பட்டாலும் அது பாஜகவுக்குதான் சாதகமாக இருக்கும் என்றார் அவர்.
பேட்டியின்போது, உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ், பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் பெ. மோகனுக்கு ஆதரவாக ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட செக்காரக்குடி மற்றும் புதுக்கோட்டையில் வாக்கு சேகரித்தார்.