
சூலூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து, கோவை, சின்னியம்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளது, அவர் நிலையான சிந்தனை இல்லாமல் செயல்படுவதையே காட்டுகிறது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
சூலூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொகுதிக்கு உள்பட்ட சின்னியம்பாளையம், கணியூர், வாகராயம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியது:
திமுக வேட்பாளர்களோ, அமமுக வேட்பாளர்களோ வெற்றி பெறுவதால் அவர்களது எம்எல்ஏ.க்களின் எண்ணிக்கை வேண்டுமானால் கூடலாம். மக்களுக்கு அதனால் ஒரு பயனுமில்லை. ஆனால், ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெற்றால்தான் தொகுதி மக்கள் பயனடைய முடியும். இத்தனை ஆண்டுகளில் திமுக எம்எல்ஏ ஒருவர்கூட என்னை நேரில் சந்தித்து தங்களது தொகுதிக்குத் தேவையான உதவிகள் குறித்து மனு அளித்ததில்லை. எனவே தகுதியான வேட்பாளர்களை மட்டுமே மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.
மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தின்போது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருகிறார். அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் டிடிவி.தினகரன் வலம் வருகிறார்.
மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். இது நிலையான சிந்தனை இல்லாமல் ஸ்டாலின் செயல்படுவதையே காட்டுகிறது.
சென்னையில் மட்டும் சுமார் 2.25 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் குற்றச்செயல்கள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கில் சிறந்து விளங்கும் மாவட்டமாக கோவை மாவட்டம் திகழ்கிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலைய விருதை கடந்த ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் பெற்றுள்ளது.
சூலூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இருகூர் பேரூராட்சியில் ரூ. 22 கோடியிலும், சின்னியம்பாளையம் பகுதியில் ரூ. 5 கோடி மதிப்பிலும், நீலாம்பூர் பகுதியில் ரூ. 2.5 கோடி மதிப்பிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பகுதி மக்களின் 60 ஆண்டு காலக் கோரிக்கையான அத்திக்கடவு -அவிநாசி திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டு முழு வீச்சில் நடைபெறுகின்றன என்றார்.
பிரசாரத்தின்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப் பேரவை உறுப்பினர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.