
மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவுடன் கூட்டணி பேசியதாக நிரூபித்தால், அரசியலில் இருந்து விலகத் தயார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: மோடியுடனும் ஸ்டாலின் பேசி வருகிறார். பாஜக கூட்டணி வெற்றி பெறும் எனத் தெரிந்துதான் எங்களுடன் பேசி வருகிறார் என்று பச்சைப் பொய் நிறைந்த ஒரு பேட்டியை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை அளித்திருப்பது கண்டனத்துக்குரியது.
தோல்வியின் விளிம்புக்குச் சென்றுவிட்ட பாஜகவுக்கு இதுபோன்று குழப்பங்களை விதைப்பது கைதேர்ந்த விளையாட்டு. ஆனால், பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை, இப்படியொரு பொய் பேட்டியை அளிப்பதற்காக தன்னை இந்த அளவுக்குத் தரம் தாழ்த்திக் கொண்டு விட்டாரே என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை முதன்முதலில் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது திமுகதான்.
அதே நேரத்தில், 5 ஆண்டு காலத்தில் மக்களுக்குச் சொல்லொணாத் துயரத்தை அளித்த பிரதமர் மோடியை சர்வாதிகாரி என்று முதன்முதலில் விமர்சித்தது மட்டுமின்றி, மீண்டும் இந்தியாவின் பிரதமராக மோடி வரவே கூடாது என்று சென்னையில் மட்டுமல்ல - கொல்கத்தாவிலும், தில்லியிலும் மாறிமாறி பிரசாரம் செய்தவன் நான்.
இதைப் பொறுக்க முடியாத பாஜக மேலிடத் தலைவர்கள் இட்டுக்கட்டிய பேட்டிகளை கற்பனைக் குதிரைகள் போல் தட்டிவிட்டு திமுகவை வம்புக்கு இழுக்க முயற்சிக்கின்றனர்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் என்னை வந்து பார்ப்பது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பும் வந்து சந்தித்துச் சென்றிருக்கிறார்.
இந்த முறை அவர் சந்தித்து சென்ற உடனேயே இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று திமுக சார்பில் தெளிவான பத்திரிகைக் குறிப்பு வெளியிடப்பட்டது.
ஆனாலும், மரியாதை நிமித்தமான சந்திப்புக்கு காது, மூக்கு வைத்து, பூச்சூடி பொட்டு வைத்து வெளியிட்டால் திமுகவுக்கு விழும் சிறுபான்மையின வாக்குகளை இந்த 4 பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் தடுத்து விடலாம், மக்களவைத் தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் ராகுல் காந்தியைப் பிரதமராக முன்னிறுத்திய திமுகவின் பிரசாரத்தை முனை மழுங்கச் செய்து விடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டுள்ளனர்.
குறிப்பாக, அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதை தமிழிசை வழிமொழிந்திருக்கிறார். காங்கிரஸ் தலைமையில் மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதிலும், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதிலும் முன்பைவிட இரட்டிப்பு மடங்கு உறுதியுடன் இருக்கிறது திமுக.
எனவே, பாஜகவுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன் என்பதை தமிழிசையோ அல்லது மோடியோ நிரூபித்து விட்டால், அரசியலில் இருந்து விலக நான் தயாராக இருக்கிறேன்.
அப்படி இருவரும் நிரூபிக்கத் தவறினால் மோடியும், தமிழிசையும் அரசியலை விட்டு விலகத் தயாரா என்றும் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.