
கமலின் கருத்து குறித்து பிரதமர் கூறியது சரியானதே என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 12ஆம் தேதி பிரசாரம் செய்தார். அப்போது அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து எனக் குறிப்பிட்டுப் பேசியதாக கூறப்படும் பேச்சானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அவரது பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திலும் பாஜக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கமலின் கருத்து குறித்து பிரதமர் மோடி, ஆங்கில தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "எந்த ஒரு இந்துவும் பயங்ரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் கண்டிப்பாக இந்துவாக இருக்க முடியாது என்றார்.
இதனிடையே பிரதமர் கருத்து குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,
கமல்ஹாசன் கருத்துக்கு சில கட்சிகள் ஆதரவு கொடுப்பது கவலையாக உள்ளது. தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது. இவ்வாறு பேச கமலுக்கு யார் தைரியம் கொடுத்தது. கமலை யாராவது தவறாக வழிநடத்கிறார்களா என்பது தெரியவில்லை.
பிரதமரின் கருத்து மிகச் சரியானது. கமல் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடுதான் இவ்வாறு பேசியுள்ளார். எனவே அவரது பிரசாரத்தை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.