ரூ.50 லட்சத்தில் புதுப்பிக்கப்படும் குற்றாலம் ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்கா

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை  மகிழ்விக்கும் வகையில் ரூ.50 லட்சம் மதிப்பில்
சுற்றுச்சூழல் குளத்திற்கு செல்வதற்காக புதுப்பிக்கப்பட்ட பாதை.
சுற்றுச்சூழல் குளத்திற்கு செல்வதற்காக புதுப்பிக்கப்பட்ட பாதை.


திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை  மகிழ்விக்கும் வகையில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குற்றாலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து மகிழும் நேரங்கள் தவிர பொழுதுபோக்குவதற்கு உள்ள ஒரே இடம் குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் உள்ள பூங்காக்கள்தான். குறிப்பாக, ஐந்தருவியின் மேலே தோட்டக் கலைத் துறை பகுதியில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் பூங்கா சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்த இடமாகும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஐந்தருவி மலையில் 37 ஏக்கர் பரப்பளவில் இயற்கையோடு இணைந்த, கண்ணுக்கு குளிர்ச்சியளிக்கும் வகையில் பசுமையான மரங்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் என பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்தது இப்பூங்கா.இதில், சுற்றுச்சூழல் குளம், மூங்கில் தோட்டம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, மலர்வனம், சிறுவர்கள் விளையாடுமிடம், நீர் விளையாட்டுத் திடல், நீரோட்ட நடைபாதை, சாகச விளையாட்டுத் திடல், பாறைப் பூத்தோட்டம், காகிதப்பூ தோட்டம், ஆலய மரத்தோட்டம், நறுமணப் பூங்கா, பார்வை மாடம், சிறிய சிலை விலங்கு தோட்டம் ,பெரணி பூங்கா, பழத்தோட்டம், கற்பாறை பூங்கா, இயற்கைப் பூங்கா, பசுமைக் குடில், உணவகம், நீருற்று உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இப்பூங்காவிலிலுள்ள பார்வை மாடத்திலிருந்து தென்காசி, செங்கோட்டை, பண்பொழி ஆகிய பகுதிகளைப் பார்வையிட முடியும்.
புதுப்பிக்கும் பணிகள்: குற்றாலத்தில் விரைவில் சீசன் தொடங்கவுள்ள நிலையில், தற்போது ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. நீரூற்று, சுற்றுச்சூழல் குளத்திற்கு செல்லும் பாதை, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்புப் பணிகள், புதிய கழிப்பிடம் கட்டும் பணி மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.50 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகின்றன. 
குற்றாலத்திற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே வந்தாலும்கூட சுற்றுச்சூழல் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சில ஆயிரங்கள் மட்டுமே. சீசன் காலம் முடிவடைந்த பிறகு இப்பூங்காவுக்குச் செல்வதற்கு பேருந்து வசதி கிடையாது. சொந்த வாகனங்களில் வந்தாலும்கூட ஐந்தருவியிலிருந்து இப்பூங்காவுக்குச் செல்லும் பாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளதே பயணிகள் வராததற்கு முக்கியக் காரணம். 
மேம்படுத்த வேண்டும்: சுற்றுச்சூழல் பூங்காவில் பொழுதுபோக்கு அம்சங்களை அதிகரித்து மேம்படுத்தினால்தான் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை கவர முடியும் என்கின்றனர் இப்பகுதிக்கு வந்துசெல்வோர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com