ஆறுமுகசாமி ஆணைய வழக்கு: உச்சநீதிமன்றம் எத்தகைய தீர்ப்பளித்தாலும் ஏற்கத் தயார்: அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் எத்தகைய தீர்ப்பு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம்
ஆறுமுகசாமி ஆணைய வழக்கு: உச்சநீதிமன்றம் எத்தகைய தீர்ப்பளித்தாலும் ஏற்கத் தயார்: அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் எத்தகைய தீர்ப்பு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.
அப்பல்லோ மருத்துவமனையின் முதல் புரோட்டான் தெரபி  புற்றுநோய் சிகிச்சை மையம் தரமணியில் செயல்பட்டு வருகிறது. அங்கு ஓமன் நாட்டை சேர்ந்த 35 வயது இளம்பெண் ஒருவருக்கு அதிநவீன சிகிச்சை மூலம் அண்மையில் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது.
அதன்படி, அவரது இரண்டு கால்களில் உள்ள எலும்பு மஜ்ஜையில் இருந்த புற்றுநோய் கட்டியை கதிரியக்கம் வாயிலாக அப்பல்லோ மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
அந்த சிகிச்சைக்குத் தேவையான ரத்த ஸ்டெம் செல்களை அப்பெண்ணின் சகோதரரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து அப்பல்லோ மருத்துவர்கள் புதன்கிழமை கூறியதாவது:
பொதுவாக கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படும்போது, அதன் எதிர்விளைவாக கண்கள், இதயம், நுரையீரல், சிறுநீரகம், கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கக் கூடும். ஆனால், அப்பல்லோவில் ஓமன் நாட்டு பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்டது அத்தகைய பாதிப்பை ஏற்படுத்தாத நவீன சிகிச்சையாகும்.  புற்றுநோய் செல்களை துல்லியாக அழிக்கும் சிகிச்சையானது அமெரிக்கா, இத்தாலி நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் மட்டுமே உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, அப்பல்லோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டியிடம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் குறித்து செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்கு அவர் அளித்த பதில்:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரசித்தி பெற்ற உள்நாட்டு மருத்துவர்கள் மற்றும் வெளிநாட்டு மருத்துவர்கள் மூலமாக உலக தரத்திலான சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நான்கு வாரங்கள் மருத்துவமனையில் இருந்து நானே சிகிச்சையை நேரடியாக கவனித்து வந்தேன்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் நாங்கள் தெரிவித்த மருத்துவ ரீதியான கருத்துகள் சரிவர மொழியாக்கம் செய்யப்படவில்லை. அதன் காரணமாகவே நாங்கள் அதனை எதிர்த்து வழக்கு தொடுத்தோம். மருத்துவக் கலைச் சொற்கள் அறிந்தவர்கள், நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட சிறப்புக் குழு அமைக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு உடன்படுவோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com