கமல்ஹாசன் முன்ஜாமீன் மனு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைப்பு

கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்துள்ளது.   
கமல்ஹாசன் முன்ஜாமீன் மனு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைப்பு


கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே எனப் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் கமல்ஹாசன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கமல்ஹாசன் தரப்பில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் புதன்கிழமை முறையீடு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

இதற்கு நீதிபதி பி.புகழேந்தி, வழக்கை ரத்து செய்வது தொடர்பான மனுவை விடுமுறை கால அமர்வில் அவசரகால வழக்காக விசாரிக்க முடியாது. எனவே முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தால் விசாரிக்கலாம் எனத் தெரிவித்தார். 

இதையடுத்து, புதன்கிழமை மாலை கமல்ஹாசன் தரப்பில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது கமல்ஹாசன் தரப்பில் வாதிடுகையில், "நான் கோட்சேவை பற்றி மட்டும் தான் பேசினேன். பொதுவாக ஹிந்துக்கள் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எனது கருத்து தவறாகப் பகிரப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், கமல்ஹாசன் பேசிய விடியோவும் காண்பிக்கப்பட்டது.

அரசு தரப்பில் தெரிவிக்கையில், " கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு எதிராக 76 புகார்கள் உள்ளன. முதலில் கமல்ஹாசனுக்கு இதுதொடர்பாக சம்மன் அனுப்பப்படும். அந்த விசாரணையில் கமல்ஹாசனின் பதில் திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்றால் அவர் கைது செய்யப்படலாம்" என்றனர். 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தது. மேலும், கமல்ஹாசன் பேசிய விவகாரம் குறித்து ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் விவாதிக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com