கொடைக்கானல் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ் வழிப் பாடப் பிரிவுகள் தொடங்கப்படுமா?

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரசு மகளிர் கலைக் கல்லூரியிலுள்ள 10 பாடப் பிரிவுகளில் 9 பாடப் பிரிவுகள் ஆங்கில வழிக் கல்வியில் கற்பிக்கப்படும் நிலையில், தமிழ் வழிப் பாடப் பிரிவுகளை
கொடைக்கானல் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ் வழிப் பாடப் பிரிவுகள் தொடங்கப்படுமா?

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரசு மகளிர் கலைக் கல்லூரியிலுள்ள 10 பாடப் பிரிவுகளில் 9 பாடப் பிரிவுகள் ஆங்கில வழிக் கல்வியில் கற்பிக்கப்படும் நிலையில், தமிழ் வழிப் பாடப் பிரிவுகளை விரைவில் தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவிகள் மத்தியில் எழுந்துள்ளது.

கொடைக்கானலில் செயல்பட்டு வந்த அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகக் கல்லூரி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பல்கலை. கல்லூரி என்ற நிலையிலிருந்து, அரசுக் கல்லூரி என்ற அங்கீகாரத்துடன் 2019-20 கல்வி ஆண்டிற்கான மாணவிகள் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

இக்கல்லூரியில் இளங்கலை பிரிவில் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொதுப் பணியியல் துறை, இளநிலை வணிகவியல் (பி.காம்), தொழில் நிர்வாகவியல் (பிபிஏ), இளநிலை அறிவியல் (பி.எஸ்.சி) கணிதம், வேதியியல், இயற்பியல், தாவரவியல், இளநிலை கணினி (பிசிஏ) பயன்பாட்டியல் ஆகிய 10 பாடப் பிரிவுகளுக்கான மாணவியர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. 

இதில், தமிழ் இலக்கியம் நீங்கலாக, பிற பாடப் பிரிவுகள் அனைத்தும் ஆங்கில வழிக் கல்வியிலேயே நடத்தப்படுகிறது. இதனால், மொத்தமுள்ள 600 இடங்களுக்கு, தற்போது வரையிலும், சுமார் 300 விண்ணப்பங்கள் மட்டுமே மாணவிகள் தரப்பில் பெறப்பட்டுள்ளன.   தமிழகத்தின் பிற பகுதிகளிலுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இக் கல்லூரியில் சேர்வதற்கு மாணவிகள் மத்தியில் ஆர்வம் இல்லாததற்கு தமிழ் வழிக் கல்வி இல்லாதது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.  மேலும் கொடைக்கானலிலுள்ள தட்ப வெப்ப நிலை, உள்கட்டமைப்பு வசதி குறைபாடு போன்ற காரணங்களால், சமவெளிப் பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் இக் கல்லூரியில் சேர ஆர்வம் காட்டுவதில்லை எனக் கூறப்படுகிறது.  

நிலக்கோட்டையிலுள்ள அரசு மகளிர் கல்லூரியில் அனைத்துப் பாடப் பிரிவுகளில் சேரவும் கடும் போட்டி இருந்த நிலையில், இக் கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வு முடிந்தும் 50 சதவீத இடங்கள் கூட நிரப்பப்படாத நிலை உள்ளது. இந்நிலையில் பிற கலைக் கல்லூரிகளைப் போல், இக் கல்லூரியிலும் தமிழ் வழியில் கணிதம், பொருளியல், வரலாறு, புவியியல் போன்ற பாடத் திட்டங்களை தொடங்க வேண்டும் என மாணவிகள் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, கல்லூரி நிர்வாகி ஒருவர் கூறியது:  பல்கலைக் கழக கல்லூரியாக இருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் அரசுக் கலைக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கல்லூரியின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அதேபோல், தமிழ் வழிப் பாடப் பிரிவுகள் தொடங்குவதற்கான அனுமதி கோரியும் பரிந்துரை செய்யப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com