ஜெயலலிதாவின் எண்ணம் நிறைவேற அதிமுக ஆட்சி தொடர வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணம் நிறைவேற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய  வேண்டுமென முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி
ஜெயலலிதாவின் எண்ணம் நிறைவேற அதிமுக ஆட்சி தொடர வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணம் நிறைவேற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய  வேண்டுமென முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:-
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில், தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றிட குடிமராமத்து திட்டம், பணிக்குச் செல்லும் மகளிருக்கு மானியத்துடன் இருசக்கர வாகனம், பொங்கல் பண்டிகையை கொண்டாட ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகுப்பு, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியுதவியாக 2 ஆயிரம் ரூபாய் ஆகிய திட்டங்கள் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளன.
மேலும், சட்டம், ஒழுங்கைச் சிறப்பாக பராமரித்ததற்கான முதன்மை விருது, உணவு தானிய உற்பத்தியில் சாதனை புரிந்தமைக்கான விருதுகள், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதில் மத்திய அரசின் விருது, பொது விநியோகத் திட்டத்தினை முழுமையாக கணினிமயமாக்கியதற்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளது அதிமுக அரசு. இத்துடன் அனைத்துத் துறைகளின் மூலம் மக்கள் நலத் திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தி சாதனை புரிந்து வருகிறது.
பொதுப்பணித் துறை, பள்ளிக் கல்வி, சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, சமூக நலன், கால்நடை பராமரிப்பு-பால்வளம் மற்றும் மீன்வளம், செய்தித் துறை, போக்குவரத்துத் துறை, குறு-சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை, வணிகம் மற்றும் பதிவுத் துறை, இளைஞர் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத் துறை உள்பட பல்வேறு அரசுத் துறைகளில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரது எண்ணத்தை நிறைவேற்ற, அதிமுக அரசு தொடர்ந்து வெற்றி நடை போட்டு அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் தங்கு தடையின்றி கிடைத்திட  செய்ய வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய  நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com