மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து

மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது என கருத்து தெரிவித்த உயர் நீதிமன்றம், மழை வேண்டி யாகங்கள் நடத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. 
மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து


மத நம்பிக்கைகளில் தலையிட முடியாது என கருத்து தெரிவித்த உயர் நீதிமன்றம், மழை வேண்டி யாகங்கள் நடத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பருவமழை பொய்த்து விட்டதால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பொதுமக்கள் குடிநீருக்காக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்துசமய அறநிலையத்துறை சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்தது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் மழை வேண்டி யாகம் நடத்த கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிட்டது. இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். மழைக்காக கோயில்களில் நடந்து வரும் யாகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். 
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன்ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இதுபோன்ற யாகங்களை நடத்த அரசே பணம் ஒதுக்கீடு செய்வது சட்டவிரோதமானது. இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க அறநிலையத்துறைக்கு அதிகாரம் கிடையாது என வாதிடப்பட்டது. அப்போது இந்துசமய அறநிலையத்துறை சார்பில், திருஞானசம்பந்தரின் பஞ்சாங்க நூலில் மழை வேண்டி யாகம் நடத்தலாம் என குறிப்புகள் உள்ளதாகக் கூறி வாதிடப்பட்டது. 
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக ஜோதிடர்களைப் போன்று அடுத்த 5 மாதங்களில் ஏற்படும் கிரகணம் போன்ற வானவியல் நிகழ்வுகளை மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஜோதிடர்களால் கணிக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பினர். மேலும் யாகங்கள் மக்களின் நன்மைக்காகவே நடத்தப்படுகின்றன. எனவே இதுபோன்ற மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com