ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு: மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு தடை

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய் அமைப்பது தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடைவிதித்து  சென்னை உயர்நீதிமன்ற
ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு: மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு தடை


ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய் அமைப்பது தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடைவிதித்து  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த கே.செல்லம் தாக்கல் செய்த மனு:  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் சிப்காட் அமைப்பதற்காக ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டன. இதுதவிர காற்றாலை அமைக்கவும், ரயில் பாதை அமைக்கவும் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. 
அரசு திட்டங்களுக்காக இதுவரை இந்தப் பகுதியில் 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு சிப்காட் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் இன்னும் பயன்படுத்தப்படாமல் காலியாகவே உள்ளது. இந்நிலையில் இந்தியன் ஆயில் கழக அதிகாரிகள், கடந்த மே 6 -ஆம் தேதி தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்திற்கு வந்து விவசாயிகளிடம் ஆவணங்களில் கையெழுத்து பெற்றதுடன், இழப்பீடுத் தொகை பெற்றுக் கொள்ளுமாறும் வலியுறுத்தினர். 
இதுதொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக், ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு விநியோகம் செய்வதற்காக பூமிக்கடியில் இயற்கை எரிவாயு குழாய்கள் பதிக்க இருப்பதாகவும் அதற்காக நிலத்தை கையகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.
ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு குழாய்கள் மூலம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய ரூ.700 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 
இத்திட்டத்தின் கீழ் ஆறுகள், கால்வாய்கள், சாலைகள், வனம், பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதிகள், சக்கரைக்கோட்டை பறவைகள் சரணாலயம்  ஒட்டியப் பகுதி ஆகிய இடங்களில் குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. இதற்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை வாரியத்திடம் அனுமதி பெறவில்லை. எனவே, முறையான அனுமதி பெறாமல் ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு கொண்டு செல்வதற்கு குழாய் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக 2018 -ஆம் ஆண்டு அக்டோபர் 5 மற்றும் 2019 -ஆம் ஆண்டு  பிப்ரவரி 18 -ஆம் தேதி மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். 
இந்த மனு, நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எம்.தண்டபாணி  ஆகியோர் கொண்ட அமர்வில்  புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதித்தும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுத்துறை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு ஒழுங்கு முறை வாரியச் செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டுமென  உத்தரவிட்டும் வழக்கை ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com