லாட்டரி அதிபர் மார்ட்டின் உதவியாளர் மரணம்: அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

தண்ணீரில் மூழ்கி இறந்த மார்ட்டினின் உதவியாளர் பழனிசாமி மரணம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 
லாட்டரி அதிபர் மார்ட்டின் உதவியாளர் மரணம்: அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு


தண்ணீரில் மூழ்கி இறந்த மார்ட்டினின் உதவியாளர் பழனிசாமி மரணம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 
கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான பல்வேறு நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன் சோதனை நடத்தினர். நிறுவன ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மார்ட்டினுக்குச் சொந்தமான ஹோமியோபதி கல்லூரியின் காசாளரும், மார்ட்டினின் உதவியாளருமான பழனிசாமியிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணைக்குப் பின்னர் பழனிசாமி கோவை காரமடை பகுதியில் உள்ள குட்டையில் பிணமாக கிடந்தார். 
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமியின் மகன் ரோஹின்குமார் தாக்கல் செய்த மனுவில், எனது தந்தையை வருமான வரித் துறை அதிகாரிகள் மார்ட்டினுக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தி கொலை செய்து அவரது உடலை காரமடை குட்டையில் வீசியுள்ளனர். எனது தந்தை தற்கொலை செய்து கொண்டதாக புகார் மனு எழுதி, அந்த மனுவில் கையெழுத்திட வேண்டும் என காரமடை போலீஸார் நிர்பந்தம் செய்தனர். மேலும், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள எனது தந்தையின் உடலில் பல பகுதிகளில் ரத்தக் காயங்கள் உள்ளன. எனவே எனது தந்தையின் உடலை மருத்துவர்கள் குழுவைக் கொண்டு உடற்கூறு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். அந்த மருத்துவர் குழுவில் எங்களது தரப்பு மருத்துவர் ஒருவரை இடம்பெற அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் கொண்ட அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸார் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  
அந்த அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதிகள், இந்த அறிக்கையில் போதுமான விவரங்கள் இல்லை. தண்ணீரில் மூழ்கி இறந்த பழனிசாமியின் உடலில் காயங்கள் எப்படி வந்தன? அந்த காயங்கள் அவர் உயிரோடு இருந்தபோது ஏற்பட்ட காயங்களா, அல்லது இறந்த பின்னர் ஏற்பட்ட காயங்களா என்பது தொடர்பாகவும், பிணவறையில் உள்ள அவரது உடல் எப்படி பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் தெளிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வியாழக்கிழமைக்கு (மே 16) ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com