வாக்கு எண்ணிக்கை: மாநில அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, 3 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை ஆலோசனை நடத்தியது.
சென்னையில்  வாக்கு எண்ணிக்கை முறைகள் பற்றிய கையேட்டை வெளியிட்ட  இந்திய தேர்தல் ஆணைய முதுநிலை துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா.  
சென்னையில்  வாக்கு எண்ணிக்கை முறைகள் பற்றிய கையேட்டை வெளியிட்ட  இந்திய தேர்தல் ஆணைய முதுநிலை துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா.  


வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, 3 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை ஆலோசனை நடத்தியது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 19-இல் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள், வரும் 23-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. இதற்காக மாநிலம் முழுவதும் 45-க்கும் அதிகமான வாக்கு எண்ணும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நீதிமன்றத் தீர்ப்பு: மக்களவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையின் போது, அந்தத் தொகுதிகளுக்கு உள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 5 வாக்குச்சாவடிகளைத் தேர்வு செய்து அவற்றின் ஒப்புகைச் சீட்டையும் எண்ண உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து, அதற்கான ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே 44 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் உள்ள சீட்டுகள் மட்டுமே எண்ணப்பட உள்ளன. அத்துடன், 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில் இருந்து ஒவ்வொரு தொகுதிக்கும் 5 வாக்குச்சாவடிகள் தேர்வு செய்யப்பட உள்ளன. இதனால், தமிழகத்தில் 1,214 வாக்குச்சாவடிகளில் பதிவான ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட இருக்கின்றன.
இந்தப் புதிய முறையின் மூலமாக, வாக்குகளை எண்ணுவது தொடர்பான ஆலோசனைகள் சென்னையில் புதன்கிழமை அளிக்கப்பட்டன. தமிழகம், குஜராத், கேரளம் மாநிலங்களுடன், புதுச்சேரி, லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
2 மணிநேரம் நடந்த கூட்டம்: சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முதுநிலை துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா, சந்தீப் சக்சேனா மற்றும் அதிகாரிகள் நிகில் குமார், திலீப் சர்மா ஆகியோர் பங்கேற்று வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு குறித்த பயிற்சிகளை அளித்தனர்.
தேர்தல் ஆணையத்தின் முதுநிலை துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா வாக்கு எண்ணிக்கை முறைகள் குறித்த வழிகாட்டி கையேட்டை வெளியிட்டார். காலை 10 மணிக்குத் தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் பிற்பகல் 12.30 மணி வரை நீடித்தது.
ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் உள்ள வாக்குச் சீட்டுகளை எண்ணும் முறை, தபால் வாக்குகளை மின்னணு முறையில் மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பான வழிமுறைகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி முகாமில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com