வாக்குச்சாவடிகளில் பதிவான ஒப்புகைச்சீட்டுகள் எப்போது எண்ணப்படும்? தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல்

ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பதிவான சீட்டுகள் எப்போது எண்ணப்படும் என்ற விவரங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
வாக்குச்சாவடிகளில் பதிவான ஒப்புகைச்சீட்டுகள் எப்போது எண்ணப்படும்? தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல்


ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பதிவான சீட்டுகள் எப்போது எண்ணப்படும் என்ற விவரங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
தமிழகத்தில் மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், வரும் 23-இல் எண்ணப்பட உள்ளன. 
இந்த வாக்கு எண்ணிக்கைக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்போது, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் உள்ள 5 வாக்குச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டு அதிலுள்ள ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்பட உள்ளன. இந்தப் புதிய நடைமுறைகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் வெளியிட்ட தகவல்:
வாக்கு எண்ணும் பணிகள், வரும் 23-ஆம் தேதியன்று காலை 8 மணிக்குத் தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த முறை, தபால் வாக்குகள் அனைத்தும் மின்னணு முறைக்கு மாற்றப்பட்டு எண்ணப்படும். இதற்காக ஒவ்வொரு தபால் வாக்கிலும் பிரத்யேக குறியீடு (க்யூ,ஆர்.கோடு) அச்சிடப்பட்டுள்ளது. இந்தக் குறியீட்டின் மூலமாக தபால் வாக்குகள் மின்னணு முறைக்கு மாற்றப்பட்டு அவை எண்ணப்படும்.
மின்னணு இயந்திரம்: தபால் வாக்குகள் எண்ணப்படும் பணிகள் தொடங்கி அரை மணிநேரத்துக்குப் பிறகு வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். முதல் வாக்குச்சாவடியில் பதிவான இயந்திரம் முதலாவது மேசைக்கும், இரண்டாவது வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகள் அடங்கிய இயந்திரம் இரண்டாவது மேசைக்கும் அளிக்கப்படும். ஒரு தொகுதியில் சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் தேர்தல் நடைபெற்றிருந்தால், அந்த இடங்களில் வேறு மாதிரியான வாக்கு எண்ணிக்கை முறை பின்பற்றப்படும். 
உதாரணமாக, வாக்கு எண்ணிக்கைக்கு 14 மேசைகள் அமைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், சட்டப்பேரவைத் தொகுதியின் முதலாவது வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட இயந்திரம் முதலாவது மேசையில் அளிக்கப்படும். 
முதலாவது வாக்குச்சாவடியில் மக்களவைத் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட இயந்திரம் ஏழாவது மேசையில் எண்ணுவதற்காக அளிக்கப்படும்.
அதாவது, 14 மேசைகள் என்பது பாதியாகப் பிரிக்கப்பட்டு முதல் பாதியில் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும், மீதமுள்ள பாதி மேசைகளில் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.
ஒப்புகைச் சீட்டு இயந்திரம்: ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பதிவான சீட்டுகளை எண்ண நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தில் பதிவான சீட்டுகள் எண்ணப்படும். ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 5 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்பதால், அவை எந்தெந்த வாக்குச்சாவடிகள் என்பது குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.
இந்த குலுக்கல் முறை என்பது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இந்த நடைமுறைகள் அனைத்தும் விடியோ படம் எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com