சுடச்சுட

  

  திருச்செந்தூரில்  நாளை விசாகத் திருவிழா: குவியும் பக்தர்கள்

  By DIN  |   Published on : 17th May 2019 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tiruchendur

  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள்.


  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை (மே 18) நடைபெறவுள்ள வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை   அதிகரித்துள்ளது.
  முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர விழாவான வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. 
  இதையடுத்து, சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது.  மகா தீபாராதனைக்குப்பின்  தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோயிளுக்கு வந்து சேர்கிறார்.
  குவியும் பக்தர்கள்: வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கடந்த சில தினங்களாகவே மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் வந்த வண்ணம் உள்ளனர். மேலும், பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். மேலும், தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வந்துள்ளனர். இதனால் கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
  பாதுகாப்பு ஏற்பாடுகள்: பக்தர்கள் பாதுகாப்பை கருத்தில்கொண்டு திருக்கோயில், கடற்கரைப் பகுதி மற்றும் கோயில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதலான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயிலுக்கு தரிசனப் பாதையில் வரும் பக்தர்களுக்கு உபயதாரர்கள் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் வசதிக்காக கூடுதலான பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
   ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் சி.குமரதுரை மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai