ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யத் தடை

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும்படி தமிழக அரசுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யத் தடை


ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும்படி தமிழக அரசுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்டம் பெருங்களத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் இந்திரா, கவிதா, இந்திராகாந்தி, ஜோதி ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறவில்லை எனக்கூறி எங்களை பணிநீக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. 
அரசின் இந்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் 2019-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் வெளியாகும் வரை எங்களை பணிநீக்கம் செய்யக்கூடாது. நாங்கள் ஆசிரியராக பணியில் சேர்ந்தபோது ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயமாகத் தேர்ச்சிப் பெற வேண்டும் என்ற சட்டம் இல்லை. எனவே அரசின் இந்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று சுமார் 60 ஆயிரம் பேர் காத்திருக்கும் நிலையில், மனுதாரர்கள் வாய்ப்பு கிடைத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாமல் உள்ளதாகக் கூறி, எனவே தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாமல் ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும், அவர்களிடம் விளக்கம் பெற்று சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். 
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் பலர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், தகுதித் தேர்வு அறிமுகப்படுத்திய 9 ஆண்டு காலக்கட்டத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை என 18 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. மேலும், மற்ற மாநிலங்களில் தகுதித் தேர்வு தொடர்பாக தெளிவான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற அரசாணை தமிழகத்தில் பிறப்பிக்கப்படவில்லை. மத்திய அரசு சார்பில், தேசிய அளவில் ஆண்டுக்கு இரண்டு முறை தகுதித் தேர்வு நடத்தப்பட்டாலும், அந்தத் தேர்வில் தமிழக ஆசிரியர்களால் கலந்துகொள்ள முடியாது. இதனை புரிந்துகொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தனர். 
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் கொண்ட அமர்வில், வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாத ஆசிரியர்கள், வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள தகுதித் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத வேண்டும். அந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை ஆசிரியர்கள் மீது பணிநீக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர். மேலும், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூன் இரண்டாவது வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com