தேனி மக்களவைத் தொகுதியில் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண வேண்டும்: காங்கிரஸ்

தேனியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச்சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 


தேனியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச்சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவைச் சந்தித்து, காங்கிரஸ் வழக்குரைஞர் அணியினர் வியாழக்கிழமை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தேனி மக்களவைத் தொகுதியில் மே 19-ஆம் தேதி நடைபெற உள்ள மறுவாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிமுக வேட்பாளருக்குச் சாதகமாகத் திருத்தப்பட்டிருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதனால், இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களோடு இணைக்கப்பட்டிருக்கும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களில் பதிவாகியிருக்கும் அத்தனை துண்டுச் சீட்டுகளையும் எண்ண வேண்டும். 
அப்படிச் செய்தால்தான் தேனி மக்களவைக்கு நடைபெறும் மறு வாக்குப்பதிவின் மீது பொது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.
தேனிக்கு ஏற்கெனவே 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் புகார் தெரிவித்திருந்தோம். தற்போது தேனிக்கு மீண்டும் 50 வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தேர்தல் அலுவலர்கள் எடுத்து வந்துள்ளனர். இது அதிர்ச்சியளிக்கிறது. பழைய இயந்திரங்களுக்குப் பதிலாக புதிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.
அதிமுக வேட்பாளர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டவிரோத உள்நோக்கத்துடனேயே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. எனவே, தேனிக்கு புதிதாக கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தாமல், அதிமுகவின் சட்டவிரோத செயல்களைத் தடுத்து நிறுத்தி, நியாயமான முறையில் தேனியில் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com