பாசிச பாஜக, அடிமை அதிமுக அரசுகளை அகற்ற அனைவரும் உறுதியேற்பீர்: மு.க. ஸ்டாலின்

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மு.க. ஸ்டாலின் பாசிச பாஜக, அடிமை அதிமுக அரசுகளை அகற்ற அனைவரும் உறுதியேற்பீர் என்றார். 
பாசிச பாஜக, அடிமை அதிமுக அரசுகளை அகற்ற அனைவரும் உறுதியேற்பீர்: மு.க. ஸ்டாலின்


அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மு.க. ஸ்டாலின் பாசிச பாஜக, அடிமை அதிமுக அரசுகளை அகற்ற அனைவரும் உறுதியேற்பீர் என்றார். 

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 

"கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் மோடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லி ஒரு முடிவு எடுத்து நீங்கள் எல்லோரும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினைச் சார்ந்த காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் ஜோதிமணிக்கு கை சின்னத்தில் ஆதரவளித்து எப்படி மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தீர்களோ, அதேபோல் மோடியின் எடுபிடியாக இருக்கக்கூடிய எடப்பாடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அதற்கு நீங்கள் எல்லோரும் வருகின்ற 19-ஆம் தேதி நாளை மறுதினம் நடைபெறவிருக்கக் கூடிய அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நீங்கள் எல்லோரும் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு தந்து நம்முடைய வேட்பாளர் செந்தில் பாலாஜியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உங்களிடத்தில் கேட்க வந்திருக்கின்றேன்.

தற்போது இந்த ஆட்சி கவிழக்கூடிய சூழ்நிலைக்கு வந்துள்ளது. 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்படும் பொழுது மோடியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படப் போகின்றது. அதேபோல், இங்கு இருக்கக்கூடிய எடப்பாடி ஆட்சியும் கவிழப் போகின்றது அதில் எந்த சந்தேகமும் கிடையாது. முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி ஊர் ஊராக சென்று இப்பொழுது என்ன பேசிக் கொண்டிருக்கிறார் என்றால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து என் ஆட்சியை கவிழ்ப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கின்றார் என்கிறார். யாரும் கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை, இந்த ஆட்சி தானாக 23-ஆம் தேதி கவிழ்ந்து விடும் அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இதுதான் தற்போது இருக்கக்கூடிய உண்மை.

நாளை மறுதினம் இந்த அரவக்குறிச்சி தொகுதியோடு சேர்ந்து, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 இடங்களில் இடைத்தேர்தல் நடைபெறப் போகின்றது. ஏற்கனவே நடந்து முடிந்த 18 தொகுதிகளில் திமுக வெற்றி பெறப்போவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இந்த 4 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறப்போகின்றது. அதில் எந்தளவும் சந்தேகம் இருக்கவேண்டிய அவசியமில்லை.

எனவே, மொத்தம் 22 தொகுதிகளின் வெற்றியைத் தொடர்ந்து, ஏற்கனவே நம்மிடம் இருக்கின்ற 97 எம்.எல்.ஏ.க்கள் என்ற நிலை வரும்போது மொத்தம் 119 எம்.எல்.ஏக்கள் என்ற அடிப்படையில் தமிழகத்தில் திமுக மெஜாரிட்டியான ஆட்சியினை அமைக்கின்ற ஒரு சூழ்நிலை உருவாகின்றது. 

திமுக ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலர்ந்திட, எடப்பாடி ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப நீங்கள் எல்லோரும், நம்முடைய வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து அவரை சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்கின்ற நேரத்தில், இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய பல்வேறு பிரச்னைகள் தீர்த்து வைக்கவும், குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் செந்தில் பாலாஜி அவர்கள் காத்திருக்கின்றார்கள்.

இந்த தடாகோவில் பகுதியைப் பொறுத்தவரையில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்று சொன்னால்,

அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கக்கூடிய 20 ஊராட்சிகள் பயன்படக்கூடிய வகையில் தனி காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும். நாகம்பள்ளி ஊராட்சி மலைக்கோவிலூரில் அமைந்துள்ள கூட்டுறவு நூற்பாலை இடத்தில் புதிய தொழிற்சாலை கொண்டுவரப்படும். அரவக்குறிச்சி தொகுதியில் அரசு கலைக்கல்லூரி உருவாக்கப்படும். அரவக்குறிச்சி, ஈசநத்தம் ஆகிய பகுதிகளில் முருங்கை உள்ளிட்ட அனைத்து விவசாய பொருட்களுக்கும் குளிர்பதன கிடங்கு மற்றும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஏரி குளங்களை தூர்வாரி தடுப்பணைகள் கட்டப்பட்டு நீர் மேலாண்மையில் தனி கவனம் செலுத்தப்படும். கிராமப்புறங்களில் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு மூலதனமாக இருக்கக்கூடிய கால்நடைகள், குறிப்பாக செம்மறி ஆடு வளர்ப்பை ஊக்குவிக்க கால்நடை வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்படும்.

100 நாட்கள் வேலைத்திட்டம் இன்றைக்கு முறையாக நடத்தப்படுவதில்லை. ஊதியத்தையும் முறையாக வழங்க முடியாத அவல நிலையில் இந்த ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே, 100 நாட்கள் வேலைத்திட்டத்தை செம்மைப்படுத்தி 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படவிருக்கின்றது. வாரத்திற்கு ஒரு முறை நீங்கள் பணிபுரியக்கூடிய இடத்திலேயே வந்து ஊதியத்தை வழங்கக்கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றோம்.

புங்கம்பாடி கீழ்வாகம் ஊராட்சி, புங்கம்பாடி நல்லாம்பட்டி மற்றும் வெஞ்சமாங்கூடலூர் மேல்வாக ஊராட்சி, ராசாப்பட்டியில் தடுப்பணைகள் கட்ட உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் உங்களுடைய வேட்பாளர் செந்தில் பாலாஜி ஒரு அருமையான தொலைநோக்கு உணர்வோடு ஒரு திட்டத்தை அறிவித்து இருக்கின்றார். வீட்டுமனை இல்லாத 25,000 பேருக்கு, 3 சென்ட் வீட்டுமனை நிலம் இலவசமாக வழங்க வேண்டும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். இது அரவக்குறிச்சிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் ஏற்படுத்த வேண்டிய திட்டம் என்பதை உணர்ந்து திமுக சார்பிலும் நான் அறிவித்திருக்கின்றேன்.

தமிழ்நாட்டில் இதற்கு முன்பு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், பக்தவச்சலம், பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி போன்றோர் முதல்வராக இருந்துள்ளனர். அதில் முக்கியமானதொன்று என்னவென்றால், முதல்வராக இருக்கக்கூடியவர்கள் காவல் துறையை மட்டும்தான் தங்களது கையில் வைத்திருப்பார்கள். 

ஏனென்றால், நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை காப்பாற்றுவதற்காக அதனைமட்டும் தான் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். அதுபோக சிறுசிறு துறைகளை தங்களுக்குள் வைத்துக்கொள்வார்கள். ஆனால், தற்போது முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரையில் காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை போன்றவற்றை கையில் வைத்துக் கொண்டுள்ளார். ஏனென்றால், அதில்தான் கமிசன் அடிக்கமுடியும், கரெப்சன் செய்ய முடியும். ஊழல் செய்து பணத்தை கொள்ளையடிக்க முடியும், இதுபோன்ற காரணத்தினால் எல்லாத் துறைகளையும் கையில் வைத்துக்கொண்டுள்ள காரணத்தினால் ஊழல் அதிகம் நடக்கின்றது என செந்தில் பாலாஜியோடு சேர்த்து கவர்னரிடத்தில் புகார் கொடுக்கப்பட்டதால் 18 எம்.எல்.ஏ.க்கள் பதவிகள் பறிக்கப்பட்டது. அதன் காரணமாகவே, உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் பதவி பறிக்கப்பட்டு, இந்த அரவக்குறிச்சி தொகுதியில் இடைத்தேர்தல் வரவிருக்கின்றது.

வேலஞ்செட்டியூர் சாலையில் குகை வழிப் பாதை அமைக்கப்படும். முக்கியமாக இந்த சின்னதாராபுரம் பகுதியைப் பொறுத்தவரையில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொகுதிகளில் புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும். தரிசு நிலங்கள் மேம்படக்கூடிய வகையில் விவசாய பாசன நீரேற்றம் நிறைவேற்றப்படும்.

சின்னதாராபுரம், க.பரமத்தி பகுதிகளில் முருங்கைக்காய் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கரூர், வெள்ளகோவில், திருப்பூர் வரை புதிய இரயில் பாதை அமைக்கப்படும்.

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து சின்னதாராபுரம் ஊராட்சி ஒன்றியம் புதியதாக உருவாக்கப்படும். பவித்ரம் ஊராட்சி தண்ணீர் பந்தல் பிரிவு முதல் சின்னதாராபுரம் ஒத்தமான்துறை பாலம் வரை உள்ள இரண்டு வழிச்சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்படும். காவிரி ஆறு மற்றும் கீழ் பவானி பாசனத்திட்டம் ஆகியவற்றின் மூலம் ஆத்துப்பாலம் நீர்த்தேக்கத்திற்கு உபரி நீர் கொண்டுவந்து நொய்யல் வாய்க்கால் மூலம் க.பரமத்தி ஒன்றியம் மற்றும் கரூர் ஒன்றியப் பகுதிகளில் விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுநீர் நொய்யல் ஆறுகளில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் பயன்படக்கூடிய வகையில் புஞ்சை கீழக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் அமராவதி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படும். அரவக்குறிச்சி விவசாயிகளுக்கு உரிய உரிமை மீட்டுத்தரப்படும். இந்த தென்னிலை பகுதிக்கு அரவக்குறிச்சி தாலுகா, புஞ்சை புகளூர் தாலுகா, க.பரமத்தி தாலுகா செயல்படக்கூடிய வகையில் க.பரமத்தி புதிய தாலுகா ஒன்று உருவாக்கப்படும். தாதாம்பாளையம் ஏரி தூர்வாரப்பட்டு அமராவதியில் தடுப்பணை அமைத்து கால்வாய் மூலம் உபரி நீர் கொண்டுவரப்பட்டு நிரப்பப்படும்.  முன்னூர், க.பரமத்தி தென்னிலை கிழக்கு, ஓடந்தூர் தென்னிலை தெற்கு, குப்பம் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளின் கிராமங்களில் விளை நிலங்களில் பதிக்கப்பட்டுள்ள உயர் மின்னழுத்த கோபுரங்கள் நீக்கப்பட்டு சாலை ஓரமாக புதைவழித்தடம் வழியாக கொண்டு செல்லப்படும்.

தென்னிலை பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்படும்.

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தின் பகுதிகளில் நொய்யல் ஆற்றின் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்கப்படும். கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் பழுதடைந்த தொகுப்பு வீடுகள் அனைத்தும் பராமரிப்பு செய்ய தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கரூர், ஈரோடு ரோட்டில், நொய்யலாற்றின் குறுக்கே உள்ள பாலத்தினை சரிசெய்து புதிய பாலம் கட்டப்படும். வெள்ளியம்பாளையம், வேட்டமங்களம், காளியம்பாளையம், ஓலப்பாளையம், சேமங்கி, முத்தனூர், கவுண்டன்புதூர் யூனிட் 1, கவுண்டன் புதூர் யூனிட் 2, நடையனூர், புஞ்சை புகளூர், ஒரத்தை போன்ற காவிரி நதி நீரேற்று பாசனங்களுக்கு தங்கு தடையின்றி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கிடைக்க ஆவண செய்யப்படும்.

வேலாயுதம்பாளையம் அரவக்குறிச்சி இடையே ரிங்க் ரோடு அமைக்கப்படும்.

இந்த மோடியின் ஆட்சி என்பது மதவெறி பிடித்த ஆட்சியாக, மதத்தை தூண்டிவிட்டு மதத்தின் பெயரில் ஆட்சி நடத்தக்கூடியவர்களாக இருக்கின்றார். கடந்த 5 ஆண்டுகளாக மதக் கலவரங்களை நடத்தி, அதன் மூலமாக லாபங்கள் அடைய திட்டங்கள் தீட்டப்பட்டு அதை நிறைவேற்றக்கூடிய முயற்சியில் மோடி தலைமையில் இருக்கக்கூடிய பாஜக ஆட்சி தொடர்ந்து அதை செய்து கொண்டிருக்கின்றது. எனவே அப்படிப்பட்டவர்களுக்கு பாடத்தை புகட்டிட வேண்டும். குறிப்பாக சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்திருக்கக்கூடிய மக்களுக்கு இன்னல்களை, தொல்லைகளை, துன்பங்களை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு ஆட்சியாகத்தான் மோடி தலைமையில் அமைந்திருக்கக்கூடிய ஆட்சி இருந்திருக்கிறது. எனவே அந்த ஆட்சிக்கு அடிபணிந்து போகக்கூடிய ஒரு எடுபிடியாக ஆட்சியாக தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கக்கூடிய அதிமுக ஆட்சி இருந்து கொண்டிருக்கின்றது.

இந்த இரண்டு அரசுகளையும் அகற்றி நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற பக்கபலமாக இருந்து செயல்பட அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நீங்கள் எல்லோரும் நம்முடைய வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு நீங்கள் எல்லோரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். உங்களின் அன்பான வரவேற்பிற்கும், உற்சாகத்திற்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறி விடைபெறுகின்றேன்" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com