
தேனி குச்சனூர் கல்வெட்டு விவகாரத்தில் நிர்வாகி வேல்முருகனை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் குச்சனூர் காசி அன்னபூரணி கோயிலுக்கு நன்கொடை வழங்கியோர் கல்வெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாரை எம்.பி என்று பொறிக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சியினர் பலர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த கல்வெட்டில் ரவீந்திரநாத்குமார் பெயர் மறைக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் அறிவிப்புக்கு முன்பே எம்.பி என பொறிக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ரவீந்திரநாத் குமார், என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் முடிவுகள் இன்றும் வெளிவராத நிலையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் தவறானது என்றும் கூறியிருந்தார். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் சின்னமனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் குச்சனூர் கோயில் நிர்வாகி வேல்முருகனை போலீசார் இன்று கைது செய்தனர்.