
செஞ்சி அருகே சிறுமிகள் உள்பட மூவர் உயிரிழந்த குட்டை.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே குட்டையில் மூழ்கி சிறுமிகள் உள்பட 3 பேர் பேர் உயிரிழந்தனர்.
செஞ்சி அருகேயுள்ள நங்கிலிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த ஜமீல் அகமது ஷகீர் மனைவி குல்சர் பேகம் (26). இவரது தந்தை இமாம் உப்பு வியாபாரம் செய்து வருகிறார். தந்தையின் வீட்டில் குல்சர் பேகம் தங்கியிருந்தார்.
தனது தங்கை ஜமீலா (10), மகள் பஷ்மின் (7) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை மாலை அந்தப் பகுதியிலுள்ள சங்கராபரணி ஆற்றில் துணி துவைத்து, குளித்துவிட்டு வர குல்சர் பேகம் சென்றார்.
ஆற்றில் நீர்வரத்து இல்லாத நிலையில், ஓரிடத்தில் தேங்கியிருந்த குட்டையில் இறங்கி மூவரும் குளித்தனர். இதில் ஜமீலா, பஷ்மின், குல்சர் பேகம் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததையடுத்து, உறவினர்கள் அவர்களைத் தேடிச் சென்றனர். ஆற்றில் உள்ள குட்டையில் 3 பேரும் சடலமாக மிதந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில், செஞ்சி போலீஸார் விரைந்து சென்று சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.