
உயர் கல்வியில் தான் விரும்பும் பாடத்தை படிக்க தந்தை மறுப்பு தெரிவித்ததுடன், தனது பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றைத் தர மறுப்பதாக தந்தை மீது மாணவி புகார் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரை அருகே வேப்பம்பட்டு கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் விஜயபாஸ்கர் (45). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளர். இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு தனுஸ்ரீ, யாமஸ்ரீ ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் குடும்பத் தகராறு காரணமாக இத்தம்பதி பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே இவரது மூத்த மகள் தனுஸ்ரீ அப்பகுதியில் உள்ள தனியார் பகுதியில் பிளஸ் 2 முடித்து பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில், பிளஸ் 2 முடித்து விட்டு இதழியல் மற்றும் விஷூவல் கம்யூனிகேஷன் பட்டப் படிப்பில் சேருவது தனுஸ்ரீயின் விருப்பமாம். அதனால், தான் படித்த பள்ளிக்குச் சென்று மாற்றுச்சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலை வாங்கச் சென்றுள்ளார். ஆனால், அதற்கு முன்னதாக சான்றிதழ்களை தந்தை விஜயபாஸ்கர் வாங்கிச் சென்றுவிட்டதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து, தந்தையிடம் இதுகுறித்து தனுஸ்ரீ கேட்டபோது, நீ படித்து ஆசிரியராக வேண்டும், அதனால், அதற்கான பட்டப்படிப்பில் சேர்ந்து கொள் என்று கூறியுள்ளார்.
ஆனால் அப்படிப்பில் சேர தனுஸ்ரீ மறுப்பு தெரிவித்துள்ளார். அதற்கு தனுஸ்ரீயின் தந்தை நான் விரும்பிய பாடப் பிரிவில் சேருவதானால் செலவு செய்வேன். இல்லையென்றால் பிளஸ் 2 மாற்றுச் சான்றிதழ்களை தர மாட்டேன் எனக் கூறினாராம்.
இதில், மனவேதனைக்கு உள்ளான நிலையில், மாணவி தனுஸ்ரீ செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் தனது தந்தை மீது புகார் செய்தார். ஆனால், அங்கிருந்த போலீஸார் புகார் மனு எழுதி வரும்படி கூறி அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு மைய அவசர உதவி எண்ணில் தொடர்பு கொண்டு, தனது தந்தை மீது புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகளிடம் மாணவியின் புகார் குறித்து விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
இதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் தந்தையைத் தொடர்பு கொண்டு, சான்றிதழ்களைத் தர மறுப்பது தொடர்பாக விசாரணை செய்தனர். அப்போது, பிரச்னை இல்லாமல் சான்றிதழ்களை மகளிடம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், வேப்பம்பட்டு கிராமத்துக்குச் சென்று, புகார் அளித்த மாணவி மற்றும் அவரது தாயார் ஆகியோரிடம் நேரில் சென்று விசாரணை செய்ய உள்ளதுடன், அது தொடர்பான தகவல்களை அறிக்கையாக அனுப்பி வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அவர் தனக்குப் பிடித்த பட்டப்படிப்பில் நேற்று சேர்க்கை பெற்றார்.