
சென்னை: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 9 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக, திருச்சியில் 107 டிகிரி வெப்பநிலை பதிவானது.
வேலூர், மதுரை விமான நிலையம், திருத்தணியில் தலா 106 டிகிரி, கரூர் பரமத்தி, மதுரை தெற்கில் 105 டிகிரி, பாளையங்கோட்டையில் 104 டிகிரி, சேலத்தில் 101 டிகிரி, சென்னை மீனம்பாக்கத்தில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது:
தமிழகத்தில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. சனிக்கிழமையும் இதே நிலை தொடரும்.
மிதமான மழை: தென் கர்நாடகத்தில் இருந்து உள் தமிழகம் வழியாக குமரிக்கடல் வரை காணப்படும் காற்றழுத்தத் தாழ்வு நிலை, வெப்பச்சலனம் ஆகியவை காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (மே 18) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தருமபுரி, சேலம், நாமக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர், திருப்பூர், ஈரோடு, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.