அதிமுக ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

அதிமுக ஆட்சியை யாராலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது என்றார் போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
அதிமுக ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

அதிமுக ஆட்சியை யாராலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது என்றார் போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

அரவக்குறிச்சி ஏவி.கார்னரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிக்கட்ட பிரசாரத்தில் அதிமுக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனுக்கு ஆதரவாக அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்குச் சேகரித்தார். அவர் பேசியதாவது: அரவக்குறிச்சி தொகுதிக்கு இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தல். பதவிக்காக ஒருவரால் கொண்டுவரப்பட்டது இந்தத் தேர்தல். இந்தத் தொகுதியில் வாய்ப்பு கொடுத்து அவரை (செந்தில் பாலாஜி) வெற்றிபெற வைத்தோம்.

அதைப் பாதுகாத்துக் கொள்ள முடியாமல் பதவி வெறி காரணமாக இந்த இயக்கத்துக்கு துரோகம் செய்துவிட்டு வேறு கட்சிக்கு சென்றுவிட்டார்.  இப்போது ஆளுங்கட்சி என்ற நினைப்பில் ஏதேதோ வாக்குறுதிகளை அவர் உங்களுக்கு கொடுத்துள்ளார்.  மறைந்த முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கான திட்டங்களை வழங்கி இந்திய துணைக்கண்டத்தில் தமிழகத்தை தலைநிமிரச் செய்தார். தாலிக்கு ஒரு பவுன் தங்கம் கொடுக்கும் மாநிலம் தமிழகம் மட்டும்தான். பணிக்குச் செல்லக்கூடிய பெண்களுக்கு சம்பளத்துடன் 9 மாத விடுப்பு வழங்கப்படுகிறது.

பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்க ரூ.20,000 மானியம் வழங்கப்படும் என ஜெயலலிதா தெரிவித்தார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதை உயர்த்தி ரூ.25,000 கொடுக்கிறார்.  பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 அனைவருக்கும் வித்தியாசம் இன்றி கொடுத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதற்கு திமுகவினர் முட்டுக்கட்டை போட பார்த்தார்கள். மேலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். ஆனால் அதற்கும் திமுகவினர் வழக்குப்போட்டு நிறுத்தியுள்ளனர்.

தேர்தலுக்கு பிறகு நிச்சயம் வழங்கப்படும்.  22 தொகுதி இடைத்தேர்தல்களில் அவர்கள் வெற்றி பெறுவார்களாம்; ஆட்சியை கவிழ்ப்பார்களாம். ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது. அவர், எதைச் செய்தாலும், என்றைக்கும் தமிழகத்தின் முதல்வராக முடியாது. இந்த ஆட்சியை எந்த கொம்பனாலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது.  இந்தத் தேர்தல் துரோகத்திற்கும், தர்மத்திற்கும் இடையே நடக்கக்கூடிய தேர்தல். இந்தத் தேர்தலில் இரட்டை இலைச்சின்னத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com