உதகை மலர்க்காட்சி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

உதகையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய மலர் கண்காட்சியை முதல் நாளில் 25,000 சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்தனர்.
உதகை மலர்க்காட்சி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!


உதகையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய மலர் கண்காட்சியை முதல் நாளில் 25,000 சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்தனர்.

உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் 123ஆவது மலர்க்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. வரும் 21ஆம்தேதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.50-ம், சிறியவர்களுக்கு ரூ.20-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் நாள் மலர்க் கண்காட்சியை 25,000 சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்தனர். 

5 நாள்கள் கண்காட்சி நடைபெறும் என்பதால் அடுத்து வரும் நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டும், வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையிலும் மாவட்ட காவல்துறை சார்பில் அரசு தாவரவியல் பூங்கா, முக்கிய சாலைகளில் கண்காணிப்புக்காக முதன்முறையாக 5 "டிரோன்'கள் (பறக்கும் கேமரா) பயன்படுத்தப்பட்டன.

கண்காட்சியில் சுமார் 35,000 மலர்த் தொட்டிகளில் மலர் ரகங்கள் காட்சி மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதேபோல சுமார் ஒன்றரை லட்சம் கார்னேசன் மலர்களால் நாடாளுமன்றக் கட்டடம் போன்ற பிரம்மாண்ட தோற்றம் உருவாக்கப்பட்டிருந்தது.

5,000 மலர் தொட்டிகளால் மலர் நீர்வீழ்ச்சியும், 3 இடங்களில் மலர் செல்பி ஸ்பாட்டுகளும், 10 மலர் அலங்கார வளைவுகளும் உருவாக்கப்பட்டிருந்தன. அத்துடன் ஹாலந்து நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட 2,000 துலீப் மலர்கள், 100 ஆர்கிட் மலர்கள், 100 கேலா லில்லி மலர்கள், ஆந்தூரியம் மலர்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
 
இந்தியாவிலேயே அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலா மையமாக உதகை உள்ளது. மலைகள்,  நீர்வீழ்ச்சிகள், இயற்கை புல்வெளிகள், மலர்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. உலகிலேயே முதல் சுற்றுச்சூழல் மண்டலமாக நீலகிரி உள்ளது. தொட்டபெட்டா மலைச்சிகரம்,  பைக்காரா ஏரி, உதகை  ஏரி, டால்பின் நோஸ் காட்சி முனை, அவலாஞ்சி, மலை ரயில் உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகின்றன. 

அதேபோல,  உதகையிலிருந்து 35 கி. மீ. தூரத்தில் இருக்கும் முதுமலை புலிகள் காப்பகம் பழைமையானது. இங்கு 250 அரிய வகை ஹார்ன்பில், பிளைகேட்சர் உள்ளிட்ட பறவை வகைகளும் உள்ளன.

உதகை மலர் கண்காட்சி உலக அங்கீகாரம் பெற்றுள்ளது. உதகையில் முதன்முறையாக 1896-ஆம் ஆண்டில் மலர்க் காட்சி நடத்தப்பட்டது. இதையடுத்து 100-ஆவது மலர்க் கண்காட்சியையொட்டி 10 ஏக்கரில் ரோஜா பூங்கா அமைக்கப்பட்டது. தற்போது இப்பூங்கா உலக அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. 

இந்திய அளவில் 19 சதவீத கொய்மலர்கள் தமிழகத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.  சுமார் ஒன்றரை லட்சம் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டடம், துலீப் மலர்கள்,  மலர் நீர்வீழ்ச்சி போன்றவை பார்வையாளர்களை கவர்ந்துள்ளன. 

இன்று நித்யஸ்ரீ மகாதேவனின் இசை நிகழ்ச்சி

உதகையில் கோடை சீசனையொட்டி நடைபெற்றுவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நித்யஸ்ரீ மகாதேவனின் இசை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறுகிறது.

உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்க உள்ளதால் இங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com