கமலின் சர்ச்சைப் பேச்சு: அறிக்கை கேட்பு: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 19)இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கான பணியில் 5
கமலின் சர்ச்சைப் பேச்சு: அறிக்கை கேட்பு: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்


சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக, மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். 
இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:-

தமிழகத்தில் நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 19)இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கான பணியில் 5 ஆயிரத்து 508 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். 

வாக்குச் சாவடிக்கு ஒரு நுண்பார்வையாளர் வீதம் ஆயிரத்து 364 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்கள் அனைவரும் பொது பார்வையாளர்களின் கீழ் செயல்படுவர். இடைத் தேர்தலுக்கான பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரத்து 939 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,300 பேர் துணை ராணுவப் படையினர் ஆவர்.

கண்காணிப்பு கேமராக்கள்: இடைத் தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளில், அரவக்குறிச்சியில் 63 பேர் போட்டியிடுகின்றனர். இதனால், அந்தத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் நான்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இடைத் தேர்தல் நடைபெறும் ஒட்டுமொத்த வாக்குச் சாவடிகளில் 656 வாக்குச் சாவடிகள் இணையதள வசதியுடன் கூடிய கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அப்போது முதல் பறக்கும் படையினரும், கண்காணிப்புப் படையினரும் தொடர் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில், இதுவரை ரூ.156.86 கோடி ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்தனர். அவற்றில் ரூ.114.50 கோடி திருப்பி தரப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் விவகாரம்: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் தேர்தல் பிரசாரத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் பேசியதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 
இதுகுறித்து அரசியல் கட்சிகள் சார்பில் தரப்பட்ட புகார் மனுக்கள் மீது விசாரித்து அறிக்கை அளிக்கும்படி கரூர் மாவட்டத் தேர்தல் அதிகாரி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதி பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மீண்டும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. எனவே, தேர்தல் ஆணையத்தின் பதிலை நீதிமன்றத்தில் தெரிவிப்போம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com