நேருக்கு நேர் மோதிய லாரியும், காரும்.
நேருக்கு நேர் மோதிய லாரியும், காரும்.

கரூர் அருகே விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

கரூர் மாவட்டம், மாயனூர் அருகே காரும், லாரியும் வெள்ளிக்கிழமை நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர். 


கரூர்: கரூர் மாவட்டம், மாயனூர் அருகே காரும், லாரியும் வெள்ளிக்கிழமை நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

கீழ மாயனூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(53); மாட்டுத்தரகர். இவர் தனது மகள் அருணா(30) என்பவரது ஒரு மாத கைக்குழந்தை சுஷாந்த், ஒன்றரை வயது குழந்தை ஜோஸ்வின் ஆகியோருக்கு புதன்கிழமை மொட்டை போட்டுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு ஹைதராபாதில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தியின் தம்பி சக்திவேல்(50) குடும்பத்துடன் கீழமாயனூருக்கு வந்திருந்தார். 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை குலதெய்வமான சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு கிருஷ்ணமூர்த்தி, மகள் அருணா, பேரக்குழந்தைகள் சுஷாந்த், ஜோஸ்வின், மைத்துனர் நாகராஜ்(28), தம்பி சக்திவேலின் மகன் கிஷோர்(13) மற்றும் உறவினர்கள்  சிவக்குமார்(40), கோமதி(45) ஆகியோர் காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

 காரை நாகராஜ் ஓட்டியுள்ளார். கார் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாயனூரை அடுத்த பொய்கைப்புத்தூர் அருகே சென்றபோது,  சென்னையில் இருந்து கரூருக்கு தையல் இயந்திரங்களை ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. 

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாயனூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காருக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே இரு குழந்தைகளும் பலியாகின. படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி, அருணா, நாகராஜ், கிஷோர், சிவக்குமார், கோமதி ஆகியோரை போலீஸார் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே கிருஷ்ணமூர்த்தி, அருணா,  நாகராஜ், கிஷோர் ஆகியோர் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுதொடர்பாக மாயனூர் போலீஸார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். 

கோயிலுக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் விபத்தில் இறந்த சம்பவம் கீழமாயனூர் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com