தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உத்தரவு: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

பருவமழை பொய்த்த காரணத்தால் குடிநீர் பிரச்னை உள்ள பகுதிகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என தமிழக
தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உத்தரவு: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி


திருப்பரங்குன்றம்: பருவமழை பொய்த்த காரணத்தால் குடிநீர் பிரச்னை உள்ள பகுதிகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார். 

மதுரையிலிருந்து வெள்ளிக்கிழமை சென்னை செல்லும் முன் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியது:

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து  யாரும் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த அடிப்படையில் இதுகுறித்து பதில் கூற முடியாது.  தேனியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் பெயர் பொறித்து மக்களவை உறுப்பினர் என கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது குறித்து எதுவும் எனது கவனத்திற்கு வரவில்லை.

நிகழாண்டில் பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால், கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே தேர்தலுக்கு முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து வறட்சியால்  பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டு  அப்பகுதியில் மக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி நிதி ஒதுக்கீடு செய்து குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. 

அண்ணா பல்கலைக் கழகத்தில்  அரசியல் தலையீடு உள்ளது எனக் கூறப்படுவது தவறான குற்றச்சாட்டு. தேர்தலில் மத ரீதியாக பரப்புரை செய்யும்போது அதுகுறித்து தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளைப்  பின்பற்றி அரசியல் கட்சித் தலைவர்கள் நடந்தால் நன்றாக இருக்கும் என்றார். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ அண்ணாதுரை முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com