திருமலையில் தாயை தவிக்க விட்டுச் சென்ற மகன்

ஏழுமலையானை தரிசனம் செய்து வைப்பதாக அழைத்து வந்து திருமலையில் தாயைத் தவிக்க விட்டுச் சென்ற சென்னை நபரை போலீஸார் எச்சரித்தனர்.

ஏழுமலையானை தரிசனம் செய்து வைப்பதாக அழைத்து வந்து திருமலையில் தாயைத் தவிக்க விட்டுச் சென்ற சென்னை நபரை போலீஸார் எச்சரித்தனர்.
திருமலையில் உள்ள வராக சுவாமி ஓய்வறை-2 பகுதியில் தஞ்சாவூரைச் சேர்ந்த மூதாட்டி அனுசூயா கடந்த 5 நாள்களாக தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் வரவை எதிர்நோக்கி சரிவர சாப்பிடாமல் இருந்தார். அவரிடம் விசாரித்தபோது சென்னையில் வசிக்கும் தன் மகன் தியாகராஜன் தன்னை ஏழுமலையானை தரிசனத்துக்கு அழைத்து வந்து திருமலையில் விட்டுச் சென்றதாகக் கூறினார். மேலும் விசாரித்தபோது அவர் தன் மகன் குறித்த விவரங்களைக் கூற மறுத்துவிட்டார்.  
முன்னதாக, மூதாட்டியிடம் திருமலையில் உள்ள தேநீர்க் கடைக்காரர் சில நாள்களுக்கு முன் பேசினார். அப்போது அவரது மகன் தியாகராஜனின் செல்லிடப்பேசி எண்ணை மூதாட்டியிடம் இருந்து பெற்று அவரைத் தொடர்பு கொண்டார். அதற்கு தியாகராஜன் "என் தாயை சென்னைக்கு பேருந்து ஏற்றி அனுப்பி வையுங்கள். உங்களுக்கு ஆன்லைன் மூலம் பணம் அனுப்புகிறேன்' என்று தெரிவித்தார். 
இந்நிலையில் தேநீர்க் கடைக்காரரிடம் இருந்து தியாகராஜனின் செல்லிடப்பேசி எண்ணை போலீஸார் பெற்று, சென்னையில் உள்ள அவருடன் தொடர்பு கொண்டனர். அப்போது "ஏழுமலையான் தரிசனத்திற்கு வந்த போது என் தாய் வழிதவறி விட்டார். அவரை தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை' என்று கூறினார். போலீஸில் புகார் அளிக்கவில்லையா? என்று கேட்டதற்கு "இல்லை' என்று தெரிவித்தார். 
"வயதான தாயை அனாதையாக விட்டுச் சென்ற குற்றத்திற்காக உங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய முடியும்' என்று போலீஸார் எச்சரித்தனர். இதையடுத்து, அவர் திருமலைக்கு வந்து தன் தாயை அழைத்துச் செல்வதாக உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com