
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள காவல் நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது சனிக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் ம. பாலமுருகன். இந்து முன்னணியின் மாநகரத் தலைவராக உள்ள இவர், தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் சனிக்கிழமை அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அத்தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி, அண்ணா நகர் சந்திப்பில் வாக்கு சேகரிக்க மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் மே 12-ஆம் தேதி இரவு சென்றார்.
அப்போது, இவர் தேர்தல் விதிமுறைகளை மீறி முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில் சிறுபான்மையினரின் சில நூறு வாக்குகளைப் பெறும் நோக்கத்துடன் பெரும்பான்மை இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து என மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
எனவே, கமல்ஹாசன் மீது உரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் பாலமுருகனுக்கு மனு ரசீது வழங்கப்பட்டது. இவருடன் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ஈசானசிவம், மாநகரச் செயலர் திருமால் ஆகியோர் உடனிருந்தனர்.