குழந்தைகளை விற்பனை செய்த விவகாரம்: அழகுக் கலை நிபுணர் கைது

ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக,   பெங்களூரைச் சேர்ந்த  பெண் அழகுக் கலை நிபுணரை சிபிசிஐடி
நாமக்கல்  குற்றவியல் நடுவர்  நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அழகுக் கலை நிபுணர் ரேகாவை ஆஜர்படுத்தி அழைத்து வரும் போலீஸார்.
நாமக்கல்  குற்றவியல் நடுவர்  நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அழகுக் கலை நிபுணர் ரேகாவை ஆஜர்படுத்தி அழைத்து வரும் போலீஸார்.


நாமக்கல்:  ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக,   பெங்களூரைச் சேர்ந்த  பெண் அழகுக் கலை நிபுணரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.  

நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட  ராசிபுரம் அருகேயுள்ள  காட்டூர் காட்டுக்கொட்டாய் வள்ளியம்மாள் நகரைச் சேர்ந்தவர் அமுதா என்ற அமுதவள்ளி (50).  விருப்ப ஓய்வு பெற்ற அரசு செவிலியர் உதவியாளரான இவர், குழந்தைகளை  சட்ட விரோதமாக வாங்கி விற்பனை செய்து வந்தது,  ஏப்ரல் 25-இல் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்)  வாயிலாக வெளியில் தெரியவந்தது.  இதைத் தொடர்ந்து,  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில்,  அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை பவர்காடு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், இடைத்தரகர்களான   ஈரோட்டைச் சேர்ந்த பர்வீன்,  அருள்சாமி,  ஹசீனா,  லீலா,  பவானியைச் சேர்ந்த செல்வி ஆகிய 8  பேரும் கைது செய்யப்பட்டு  சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில்,  சிபிசிஐடி போலீஸார் வசம் வழக்கு மாற்றப்பட்டது.

அவர்கள், அமுதாவை இரு நாள்களும்,  அருள்சாமி,  முருகேசன் ஆகியோரை  மூன்று நாள்களும்,   பர்வீன், ஹசீனாவை ஒரு நாளும் காவலில்  எடுத்து விசாரித்தனர்.  விசாரணையில் கிடைத்த தகவல்களின் பேரில்,  சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சாந்தி என்பவர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து,  சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில்   26 பெண் குழந்தைகள்,  6 ஆண் குழந்தைகள் என 30 குழந்தைகள் விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.  இருப்பினும்,  4 ஆண்டுகளில் 250 குழந்தைகள் வரை விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.

அழகுக் கலை நிபுணர் கைது:  இதற்கிடையே,  ஈரோட்டைச் சேர்ந்த கருமுட்டை விற்பனை இடைத்தரகரான  ஹசீனாவிடம் பெற்ற வாக்குமூலம் அடிப்படையில்,  பெங்களூரில் அழகுக் கலை நிபுணராகப் பணியாற்றி வந்த ரேகா (40)  என்பவரை சிபிசிஐடி போலீஸார் வெள்ளிக்கிழமை மாலையில் கைது செய்தனர்.  கருமுட்டைத் தரகராகச் செயல்பட்டு வந்த இவர்,  அமுதா வாயிலாக பெங்களூரில் வசதி படைத்தோர்களிடம் குழந்தைகளை விற்றது தெரியவந்துள்ளது. 

சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில் ரேகாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சனிக்கிழமை பிற்பகல் நாமக்கல் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். நீதிமன்றம் விடுமுறை என்பதால்,  நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்ற (எண்  2)  நீதிபதி ஜெயந்தியின் வீட்டில், அவரது முன்னிலையில் ரேகாவை, நாமக்கல் சிபிசிஐடி ஆய்வாளர் பிருந்தா  ஆஜர்படுத்தினார். 

இதையடுத்து,  நீதிபதி ஜெயந்தி உத்தரவின்பேரில்,  ரேகாவை 15 நாள்கள் காவலில் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். குழந்தைகள் விற்பனை சம்பவம் தொடர்பாக,  இதுவரை  7 பெண்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com