விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு தமிழுணர்வுக்கு எதிரானது:  பழ. நெடுமாறன்

விடுதலைப் புலிகள் மீது மத்திய அரசு விதித்துள்ள தடை நீட்டிப்பு தமிழுணர்வுக்கு எதிரானது என்றார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவரும்,
விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு தமிழுணர்வுக்கு எதிரானது:  பழ. நெடுமாறன்


தஞ்சாவூர்: விடுதலைப் புலிகள் மீது மத்திய அரசு விதித்துள்ள தடை நீட்டிப்பு தமிழுணர்வுக்கு எதிரானது என்றார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவரும், தமிழர் தேசிய முன்னணி தலைவருமான பழ. நெடுமாறன்.

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சனிக்கிழமை மாலையில் நடைபெற்ற இனப்படுகொலை நாள் 10 -ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவர் பேசியது:

நம் தமிழ் இனம் வரலாற்றுச் சிறப்புப் பெற்றது. ஐம்பதாயிரம் ஆண்டுகளில் எவ்வளவோ வெற்றிகளை நம் தமிழினம் பெற்றது. தென் கிழக்கு ஆசிய நாடுகளை தங்கள் ஆளுகையின் கீழ் தமிழர்கள் வைத்திருந்தனர். அப்படிப்பட்ட தமிழினம் 2009 -ஆம் ஆண்டில் பேரழிவைச் சந்தித்தது. அப்போது உலக நாடுகள் எதுவும் அந்த இனத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை. இந்த அழிவின் எச்சங்கள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நெஞ்சங்களில் நெருப்பாய் எரிந்து கொண்டிருக்கிறது. அது அணையக்கூடாது. அவ்வாறு இருந்தால்தான் நம் இனம் மீண்டும் எழுச்சி பெறும். நாம் செம்மாந்த நிலையை எட்ட முடியும். இந்த 10 -ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஜூலை 6, 7-ஆம் தேதிகளில் மாநாடு நடத்தப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, புதுச்சேரி நகரங்களிலும் மாநாடு நடத்தப்படும். விடுதலைப்புலிகளுக்கு மீண்டும் 5 ஆண்டுகளுக்கு மத்திய பாஜக அரசுத் தடையை நீட்டித்துள்ளது. 2009 -ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகளை முற்றிலுமாக அழித்து ஒழித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தத் தடை நீட்டிப்புக்கான அவசியம் என்ன? விடுதலைப்புலிகள் மீதான தடையை காங்கிரஸ் அரசு 1991 -ஆம் ஆண்டில் விதித்தது. தமிழ்நாட்டையும் சேர்த்து தமிழீழம் கேட்டு விடுதலைப்புலிகள் போராடுவதால், இந்தியாவுக்கு ஆபத்து என அப்போதைய காங்கிரஸ் அரசு கூறியது. ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கம் தொடங்கப்பட்ட நாள் முதல் 2009 -ஆம் ஆண்டு வரை இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகளிடமும் உதவிகள் பெற்றதில்லை. இந்த விஷயத்தில் பிரபாகரன் தெளிவாக இருந்தார். இதை பிரதமர் மோடி உணர வேண்டும். ஆனால், இந்திய அரசு உதவி செய்த சிங்கள அரசு சீனா, பாகிஸ்தானிடம் உறவு கொண்டாடியது. விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்புக்கு அப்போதைய காங்கிரஸ் அரசு கூறிய காரணத்தையே இப்போதைய பாஜக அரசும் கூறுகிறது. எனவே, காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் வேறுபாடு இல்லை.

விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்பு என்பது தமிழுணர்வுக்கு எதிரானது. இது, தமிழர்களுக்கு எதிரான தடையாகவே கருதப்படுகிறது. தமிழர்களை ஒடுக்க நினைப்பது ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை என்றார் நெடுமாறன்.

பின்னர், முற்றத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெடுமாறன் தலைமையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் பி.ஆர். பாண்டியன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யானாபுரம் சி. முருகேசன், வழக்குரைஞர் பானுமதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com