
ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 101 வயதுள்ள மூதாட்டி நடந்து சென்று வாக்களித்தார். மேலும், இளம் வாக்காளர்களும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
மணியாச்சியை அடுத்துள்ள ஒட்டநத்தம் ராமானுஜம் இந்து நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் 101 வயது மூதாட்டி இசக்கியம்மாள் தானாகவே நடந்து வந்து வாக்களித்தார். அதேபோல் அப்பகுதியைச் சேர்ந்த முதல்முறை வாக்காளர்கள் ர.முகேஷ்கண்ணா, செ.செல்வலெட்சுமி, ந.கமலி ஆகியோரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கைப் பதிவு செய்தனர்.
நாசரேத் பகுதியில் செவிலியர் கல்லூரியில் படித்து வரும் செல்வலெட்சுமி, கமலி ஆகியோர் கூறும்போது, நாங்கள் மக்களவைத் தேர்தலில் வாக்களித்தோம். இப்போது பேரவைத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கிறோம். எங்கள் பகுதி அனைத்து விதத்திலும் மேம்பட வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கவும், தகுதிகேற்ற வேலைவாய்ப்பும் வழங்கக்கூடிய அரசு அமைந்திட வேண்டும் என்றனர்.