கொடைக்கானலில் 300 விடுதிகளுக்கு சீல் வைப்பு: கட்டண உயர்வால் சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு

கொடைக்கானலில் 300 விடுதிகளுக்கு சீல் வைப்பு: கட்டண உயர்வால் சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்பட்ட 300  தங்கும் விடுதிகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததால்,  சுமார் 5 ஆயிரம் பேர்


கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்பட்ட 300  தங்கும் விடுதிகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததால்,  சுமார் 5 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். மேலும், விடுதியில் தங்குவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கொடைக்கானலில் விவசாயத்திற்கு அடுத்த படியாக சுற்றுலாத் தொழில் மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.  காட்டேஜ்கள், டிராவல்ஸ், உணவு விடுதிகள் மற்றும் சாலையோர வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே உள்ளன. இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுப்படி கொடைக்கானல் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட சுமார் 300 காட்டேஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டன. இந்த காட்டேஜ்களில் பணி புரிந்த ஊழியர்கள் சுமார் 5 ஆயிரம் பேரும், மறைமுகமாக 2 ஆயிரம் பேரும் வேலையிழந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் தவிப்பு: கொடைக்கானலில் தற்போது சீசன் நிலவி வரும் வேளையில் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்கு சுமார் 300 காட்டேஜ்கள் சீல் வைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள காட்டேஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

சீசன் நேரங்களில் 12 மணி நேரம் 4-பேர் தங்குவதற்கு ரூ. 2-ஆயிரம் முதல் ரூ. 2,500-வரை வசூல் செய்யப்படும். தற்போது ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வசூல் செய்யப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இன்னும் சீசன் நிறைவடைய 25-நாள்களே உள்ளன. தற்போது கட்டண உயர்வு காரணமாக  சுற்றுலாப் பயணிகள் விடுதிகளில் தங்காமல், ஒருநாள் மட்டும் சுற்றுலா இடங்களை பார்த்து விட்டு திரும்பி விடுகின்றனர். இதனால் சுற்றுலாத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொடைக்கானலைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியது: கொடைக்கானலில் பல ஆண்டுகளாக விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வந்தது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள், உணவக விடுதிகள் மற்றும் ரிசார்டுகள் கட்டப்பட்டன. 

இதனால் விவசாயத் தொழில் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு தெரிந்து தான் கட்டடம் கட்டுகின்றனர். அப்போதே விதிமுறைகளுக்குள்பட்டு  கட்டியிருந்தால் இந்த சூழல் ஏற்பட்டிருக்காது. கொடைக்கானலில் கடந்த 40-ஆண்டுகளாக இருந்த சீசன், தற்போது பெரிதும் மாறியுள்ளது. 
இதேநிலை நீடித்தால் சீசன் முடிந்தவுடன் பலர் வெளியூர்களுக்கு வேலை தேடிச் செல்லும் நிலை உருவாகும். எனவே மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டதால், மாதம்தோறும் மின்துறை மற்றும் நகராட்சிக்கு  ரூ. 50-லட்சத்திற்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.
இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது: கொடைக்கானலில் மாஸ்டர் பிளான் 1993-இல் இருந்து அமல்படுத்தப்பட்டது. ஆனால் காட்டேஜ்கள் கட்டுபவர்கள் விதிமுறைகளை மீறி கட்டியதால் தான், தற்போது  சீல் வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 300-காட்டேஜ்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை    
கொடைக்கானல் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பொன்னுச்சாமி கூறியது: கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு முன் கூட்டியே தங்கும் விடுதிகளையும், காட்டேஜ்களையும் பதிவு செய்து கொள்ள வேண்டும். தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கொடைக்கானலில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து பிரச்னையை சமாளிப்பதற்காக முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  ஏரிச்சாலை, அண்ணாசாலை, உட்வில்சாலை போன்ற இடங்களில் ஒரு வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஓட்டும் போது  ஓட்டுநர்கள் புகைப் பிடித்தல், செல்லிடப்பேசி  பேசுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது. ஏரிச் சாலை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்தை கண்காணிக்க உயர் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com